மோடி ரூ.15,000 செலுத்துவதாகவும் அதற்காக அஞ்சல் அலுவகலத்தில் சேமிப்புக் கணக்கு துவங்க வேண்டும் எனவும் தகவல் பரவுவதால் மக்கள் குவிந்து வருகின்றனர். புதுக்கோட்டையில் தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள சேமிப்புக் கணக்கில் வாக்காளர்களுக்கு பணம் செலுத்தப்படவுள்ளதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் முண்டியடித்தனர்.

அதேபோல் புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான தபால் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வாக்காளர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் ஜீரோ பேலன்சில் சேமிப்புக் கணக்கு திறந்தால், அதில் 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை பிரதமர் மோடி செலுத்துவார் என யாரோ கொளுத்திப்போட்ட வதந்தி, காட்டுத்தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

இது வதந்தி என தெரிந்தும் நப்பாசையில் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து சேமிப்புக் கணக்கை தொடங்கி வருகின்றனர். வாக்காளர்களுக்கு சேமிப்புக் கணக்கில் பணம் செலுத்தப்படவுள்ளதாக பரவிய வதந்தியால், பலர் அன்றாடம் வயிற்றுப் பிழைப்பிற்காக செய்யும் வேலைகளைக் கூட ஒதுக்கிவைத்துவிட்டு, தபால் நிலையங்களில் பல மணி நேரம் காத்திருப்பதாக கூறும் சமூக ஆர்வலர்கள், வதந்தியை பரப்புபவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.