இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துவிட்டது. 652 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. மகாராஷ்டிராவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 2000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பாதிப்பு கடுமையாக உள்ளது. 

கேரளாவில் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை கடந்த 10 நாட்களாக கட்டுக்குள் வந்திருப்பதுடன் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பிவருகின்றனர்.

ஆனாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்துவருவதால், மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனாவை தடுக்க, முதலில் அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அனைத்து மாநிலங்களூமே ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. எனவே அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி, அனைவரின் கருத்தையும் கேட்டறிந்து, மே 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டி உத்தரவிட்டார் பிரதமர் மோடி. 

இந்நிலையில், மே 3க்குள்ளாகவும் கொரோனாவை தடுக்க முடியாது என்றே தெரிகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. எனவே ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதற்கிடையே, மத்திய அரசு மே 3ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியிருந்த நிலையில், ஏற்கனவே தெலுங்கானாவில் மே 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவிட்டது. 

அதேபோல ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர், ஊரடங்கை தளர்த்துவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துவிட்டபோதிலும், எந்த மாநில அரசுமே ஊரடங்கை தளர்த்த முன்வரவில்லை. 

எனவே கொரோனாவிலிருந்து மக்களை காக்க, அதிலிருந்து முழுமையாக மீள வேண்டும் என்ற சூழலில், அது மே 3க்குள் நடந்துவிடுமா என்பது சந்தேகமே. அதனால் வரும் 27ம் தேதி(திங்கட்கிழமை) ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. எனவே அமைச்சரவை கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.