பணவீக்கம் குறித்த ராகுல் காந்தியின் கேள்விக்கு நேருவை சுட்டிக்காட்டி கிண்டலடிக்கும் வகையில் பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
பணவீக்கம் குறித்த ராகுல் காந்தியின் கேள்விக்கு நேருவை சுட்டிக்காட்டி கிண்டலடிக்கும் வகையில் பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 31 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2022 - 23 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரைக்கு நன்றி தெரிவித்தும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது பணவீக்கம் குறித்த ராகுல் காந்தியின் கேள்விக்கு நேருவை சுட்டிக்காட்டி கிண்டலடிக்கும் வகையில் பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, நாட்டில் பணவீக்க விகிதம் அதிகமாகியுள்ளதால் விலைவாசி உயர்வும், இளைஞர்களுக்கான வேலையின்மையும் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் அரசு பொருளாதாரக் கொள்கைகளை சரியாக கையாளாததால் ஏற்பட்ட தோல்வியே இது. கோடிக்கணக்கான இந்தியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் பிரதமர் நேருவை சுட்டிகாட்டி பேசிய பிரதமர் மோடி, நேரு பிரதமராக இருந்த போது நாடாளுமன்றத்தில் நேருவிடம் பணவீக்கம் அதிகமாக இருப்பது பற்றி கேள்வி எழுப்பிய போது, கொரியாவில் யுத்தம் நடப்பதால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது என்று நேரு கூறினார்.

தற்போதைய சூழலில் அமெரிக்காவில் 7 சதவீதம் பணவீக்கம் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் கொரோனாவை காரணம் காட்டி பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என பொறுப்பை தட்டிக்கழித்திருக்கும். ஆனால் நாங்கள் கொரோனா நெருக்கடி சூழலிலும் இந்தியாவின் பணவீக்க விகிதத்தை 5 சதவீதத்தில் வைத்திருக்கிறோம். அதேபோல் உணவுப்பொருள் விலைவாசியும் 5 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயர்வதை கட்டுப்படுத்தியுள்ளோம். நாங்கள் சரியாக தான் செயல்பட்டு வருகிறோம். உங்களை போல காரணம் சொல்லவில்லை என பிரதமர் மோடி ராகுல்காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
