பிரதமர் மோடி விழா மேடையில் இருந்து இறங்கும் போது அருகில் நின்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை செல்லமாக தோளில் தட்டி கொடுத்ததும், அரசு விழா அவரது பெயரை சொன்னதும் அரங்கமே அதிர்ந்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள அரங்கில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ரூ.12,400 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா, முடிந்த திட்டங்களை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு ஆகியவை நேற்று நடைபெற்றன. இதற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலை வகித்தார்.

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், ''ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஜி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி ஜி...'' என்று பேசத் தொடங்கினார்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெயரைச் சொன்னதும் கைத் தட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி முடிந்த திட்டங்களைப் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவை முடித்துவிட்டுக் கிளம்பும்போது பிரதமர், வணங்கி நின்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணியைச் செல்லமாகத் தோளில் தட்டி கொடுத்துவிட்டுச் சென்றார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.