காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று தமிழகம் முழுவதும் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்தும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், வானில் கருப்பு பலூன்கள் பறக்க விட்டும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்  என திமுக செயல்  தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் செம்பியமாதேவி கிராமம் சென்ற ஸ்டாலின் அங்கு பொது மக்களிடையே பேசினார்.

அப்போது காவிரி உரிமை மீட்பு பயணத்தை அனைத்து கட்சிகளின் சார்பாக ஐந்தாவது நாளாக நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்று  மாலை கடலூர் மாவட்டத்தில் இந்த பயணத்தை முடித்துக் கொண்டு, கடலூரில் இருந்து ஏறக்குறைய 1,000 வாகனங்களில் சென்னையை நோக்கி ஒரு மிகப்பெரிய பேரணியாக சென்று, தமிழக கவர்னரை சந்திக்க இருக்கிறோம்.

தமிழகத்தில் இன்றைக்கு காவிரி பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துபவர்கள், அதிலே பங்கேற்பவர்கள் எல்லாம் தமிழக மக்களுக்கு தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், காவிரி விவகாரத்தில் தங்களுடைய உணர்வை விளையாட்டுப் போட்டிகளின் மூலம் வெளிப்படுத்தினால், எந்தப் பிரச்சினையும் வராது என்று நான் ஏற்கனவே எடுத்துச் சொன்னேன். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நான் எடுத்துச் சொன்ன கருத்து பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை, கவலைப்படவில்லை.

போட்டிகள் நடப்பதை மாற்றுவது, அல்லது வேறு ஏதேனும் கருத்துகளை அரசு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், காவிரிப் பிரச்சினை பற்றியெல்லாம் இங்கிருக்கின்ற ஆட்சிக்கு கவலையில்லை என்பதால், எப்படியாவது அந்தப் போட்டிகளை நடத்தியே தீர வேண்டும். அதற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என்று, 4 அடுக்கு, 5 அடுக்கு என்று போலீஸ் பாதுகாப்பை அதிகரித்து இருக்கின்றனர்.

ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுத்தபடி, தமிழ்நாட்டுக்கு பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சர்கள் வரும்போது கருப்பு கொடி போராட்டம் நடத்துவது என அறிவித்திருக்கிறோம். அதன்படி சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிரதமர் வருகிறார். சென்னை, அடையாறு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அவருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

.

அதை தடுத்து நிறுத்த, எல்லோரையும் கைது செய்யவிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. இந்தப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் எங்களையும் கூட ஒருவேளை கைது செய்யலாம். ஆங்காங்கே இருக்கின்ற தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்கள் எல்லாம் கைது செய்யப்படும் நிலை ஏற்படலாம். எத்தனை பேரை கைது செய்து விடுவீர்கள்? எவ்வளவு பேரை சிறையில் அடைத்து விடுவீர்கள்?

எத்தனை பேரை நீங்கள் சிறையில் அடைத்தாலும், பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கு பொதுமக்கள் தயாராக இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் நாளை துக்க நாளாக கடைபிடிக்கும் வகையில், 12-ம் தேதியன்று எல்லோருடைய வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டுமென்றும், அனைவரும் கருப்பு உடையணிய வேண்டும் என்றும், கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்  என ஸ்டாலின் தெரிவித்தார்.