Presidential nominee Ramnath Govind to visit tomorrow - meet ops and eps

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் ஆதரவு திரட்டுவதற்காக நாளை சென்னை வருகிறார்கள்.

இந்திய நாட்டின் 14வது ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17ம் தேதி நடக்கிறது. இதில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

தனக்கு ஆதரவு அளித்த கட்சி தலைவர்களையும், அந்தந்த கட்சிகளின் எம்பிக்கள், எம்எல்ஏக்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆதரவு திரட்டுவதற்காக விமானம் மூலம் நாளை காலை 11 மணிக்கு ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆதரவு கேட்கிறார்.

மேலும் அதிமுகவின் இரு அணிகளில் உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இந்த சந்திப்பு முடிந்தவுடன் நாளை இரவு 8 மணிக்கு ராம்நாத் கோவிந்த் டெல்லி திரும்ப திட்டமிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் நாளை சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.