மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக இன்று இந்தியா வருகிறார். அவருக்கு அகமதாபாத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருடைய வருகையால் இந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

அமெரிக்க அதிபராக கடந்த 2017ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் இந்தியாவுக்கு வந்தது கிடையாது. அவருடைய மகள் இவாங்கா மட்டும், தொழில் முறை பயணமாக இந்தியா வந்து  சென்றுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவில் கடந்தாண்டு 50 ஆயிரம் இந்தியர்கள் பங்கேற்ற ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், டிரம்ப்பும் கலந்து கொண்டனர். அப்போது, இந்தியாவுக்கு பயணம் வரும்படி டிரம்புக்கு மோடி  அழைப்பு விடுத்தார். அதை டிரம்ப் ஏற்றார். அதன்படி, முதல் முறையாக இந்தியாவுக்கு இன்று டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக வருகிறார். அவருடன் மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவும் வருகிறது. 

இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டப்படி இன்று நண்பகல் 11.30-க்கு ஏர்போர்ஸ் ஒன் விமானம் மூலம், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் சர்வதேச விமான நிலையத்தில் டிரம்ப் வந்து இறங்குகிறார். அங்கு  அவருக்கு இந்திய கலாசார நடனங்கள், மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரை பிரதமர் மோடி நேரடியாக சென்றுவரவேற்கிறார். பின்னர், இருவரும் சாலை மார்க்கமாக 22 கிமீ தூரம் பேரணி செல்கின்றனர். அப்போது, சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு, வரவேற்பு அளிக்கின்றனர். மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. இவரது வருகையையொட்டி 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவில் வெறும் 36 மணி நேரமே இருக்கிறார். ஆனால், அவரை வரவேற்பதற்காகவும், அவருடைய நிகழ்ச்சிக்காகவும் மத்திய அரசு தரப்பில் ரூ.120 கோடி வரை செலவழிக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மக்களின் வரிப்பணம் இப்படி வீணடிப்பதால், இந்தியாவுக்கு ஏதாவது லாபம் கிடைக்கப்போகிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.