திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நலம் விசாரித்தார். பிறகு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவரான திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். மேலும் அவரை நேரில் பார்த்ததாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர். இன்று புகைப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வயது முதிர்வு மற்றும் நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக நலிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் உடல்நிலை மோசமானது. எனவே மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரித்து சென்றனர். அவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த புகைப்படமும் வெளியிடப்பட்டது. மேலும் திரையுலகினரும் மருத்துவமனை சென்று மு.க.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துமனைக்கு வருகை தந்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். பிறகு தனிவிமானம் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.