கொரோனா தடுப்பு பணியில் உள்ள  மருத்துவர்களை  தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

உலகமே கொரோனா பீதியில் இருந்து வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம் வைத்து, சுயநலமின்றி, பொதுநலத்துடன் மக்களுக்காக சேவையாற்றி வருகின்றனர். ஆனால், இவர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  மக்களின் உயிரைக்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது சுகாதார பணியாளர்களை தாக்குபவர்கள் மீது, ஜாமினில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு, ஆறு மாதம் முதல், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில், மத்திய அரசு, அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கான முடிவு நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த1897ம் ஆண்டு தொற்றுநோய் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த அவசரச் சட்டத்தின் மூலம், பணியிடத்திலும் தாங்கள் குடியிருக்கும் பகுதியிலும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணியாளா்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியது அடுத்து இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.