செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுப்பதாக கூறி அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்த பிரேமலதா மீது அந்தஇரண்டு கட்சிகளுமே அதிருப்தி தெரிவித்துள்ளன.

செய்தியாளர்களை சந்தித்து துரைமுருகன் கூறிய புகார்களுக்கு விளக்கம் அளிப்பது என்பது தான் பிரேமலதாவின் திட்டம். துவக்கத்தில் அவர் நினைத்தபடி எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் திடீரென செய்தியாளர் ஒருவரை அவர் ஒருமையில் பேசிவிட பதிலுக்கு வேறு சில செய்தியாளர்கள் பிரேமலதாவிடம் எகிறிவிட்டனர். இதனால் தான் என்ன பேசுகிறேன் என்பதையே மறந்து பிரேமலதா பேச ஆரம்பித்துவிட்டார்.

கூட்டணி குழப்பத்தால் கடந்த இரண்டு நாட்களாகவே கேப்டன் – பிரேமலதா இடையே மன வருத்தம் இருந்தது. மேலும் மாவட்டச் செயலாளர்களும் ஒட்டு மொத்தமாக அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசும் போது கடந்த தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வென்று என்ன தமிழகத்திற்கு கிடைத்தது என்று ஒரு கேள்வியை கேட்டார்.

அதிமுக எம்பிக்கள் 37 பேரும் டெல்லி சென்று வருவதை தவிர தமிழகத்திற்கு என்று எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும் ஒரே போடாக போட்டார் பிரேமலதா. இதன் மூலம் மத்தியில் கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சியில் இருந்த மோடியும் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்கிற ரீதியில் பிரேமலதா பேச ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில நிதானம் தவறிய பிரேமலதா தாங்கள் பாஜக – அதிமுகவுடன் கூட்டணி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்துவிட்டார்.

மத்தியில் இருந்து எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக எம்பிக்கள் தமிழகத்திற்கு கொண்டுவரவில்லை என்று பிரேமலதா கூற அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பிரேமலதாவே அதிமுக ஒன்றும் செய்யவில்லை என்கிறார், அப்படி இருக்கும் போது அதிமுகவுடன் எதற்கு அவர் கூட்டணி பேசுகிறார் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் மோடி அரசும் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று கூறிவிட்டு அவரை மீண்டும் பிரதமராக்குங்கள் என்று எப்படி பிரேமலதா பிரச்சாரம் செய்வார் என்றும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ஏற்கனவே கேப்டன் மகன் விஜய பிரபாகரன் அதிமுக – திமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்ததால் ராஜேந்திர பாலாஜி’ உள்ளிட்ட அமைச்சர்கள் கடுப்பாகினர். தற்போது பிரேமலதாவும் அதே போல் சேம் சைட் கோல் போட்டுள்ளதால் அதிமுக தரப்பு மட்டும் அல்லாமல் பாஜ.க தரப்பும் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தி கூட்டணி பேச்சின் போது வெளிப்படும் என்றும் சொல்கிறார்கள்.