premalatha vijayakanth talks about edappadi
மத்திய அரசை அமைச்சர்கள் விமர்சிக்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்தர்பல்டி அடிக்கிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு கட்ட அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கத்தியின் விளிம்பில் நிற்பது போல காட்சியளிக்கிறார்.
ஆட்சியை விட்டுவிட கூடாது என்ற முனைப்போடு செயல்பட்டு வரும் எடப்பாடியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகின்றனர்.
போதாதகுறைக்கு அவர் தரப்பில் இருக்கும் அமைச்சர்களே அவருடைய காலை வார நேரம் பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை எந்த அமைச்சர்களும் விமர்சிக்க வேண்டாம் எனவும், ஊடகங்கள், பொதுக்கூட்டங்களில் கூட விமர்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மத்திய அரசுடன் மாநில அரசுக்கு இணக்கமான சூழல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாகர்கோவிலில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் உள்கட்சி பூசல் அதிகரித்து உள்ளது.
எடப்பாடி அணியிலும், பன்னீர்செல்வம் அணியிலும், பதவியை காப்பாற்றிக் கொள்வதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குறியாக உள்ளனர்.
முதல்வர் பதவி யாருக்கு? பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்று அவர்கள் போட்டி போடுவதால் இரண்டாக உடைந்த அதிமுக இனி ஆட்சிக்கே வர முடியாது.
மத்திய அரசை அமைச்சர்கள் விமர்சிக்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது தைரியம் அற்ற அரசு தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பதை காட்டுகிறது.
விரைவில் இந்த ஆட்சி கவிழ்ந்து பொதுத்தேர்தல் வரும். அதுவரை ஜனாதிபதி ஆட்சியும் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
