சில தினங்களுக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் மகா மட்டமாக நடந்துகொண்ட டாக்டர் அன்புமணி ராமதாஸைத் தொடர்ந்து, இன்றைய சந்திப்பில் அதையும் தாண்டி கேவலமாக நடந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் தனது நடத்தைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும் என்ற கோரிக்கை பத்திரிகையாளர்கள் மத்தியில் மட்டுமல்ல ஓரளவுக்கு டீஸண்டான அரசியல்வாதிகள் மத்தியிலும் எழுந்துள்ளது.

இன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துவக்கம் முதலே ஏறத்தாழ அனைத்து பத்திரிகையாளர்களையும் ‘நீ’, போ’,வா’ போட்டு ஒருமையிலேயே பேசிய பிரேமலதா, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர்களை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது சண்டித்தனத்தை விடாமல் தொடர்ந்தார். அடுத்து சில கேள்விகள் கேட்ட பத்திரிகையாளர்களை ‘நீ எந்தப் பத்திரிகை’ என்று கேட்டு அவர்களைத் தனிப்பட்ட முறையில் அசிங்கமாகப் பேசினார்.

இன்னொரு சமயம் ’24 மணி நேரமும் எங்க கேட்டு வாசல்ல காத்துக்கிடக்கிறவங்கதான நீங்க?’ என்று பத்திரிகையாளர்களை பிச்சைக்காரர்கள் ரேஞ்சுக்கு கீழிறக்கினார். அவரது உடல்மொழி ஒரு அரசியல் தலைவருடையது போலில்லாமல் ‘தூள்’ சொர்ணாக்காவின் உடல்மொழி போன்றே இருந்தது என்பதை கேப்டன் விஜயகாந்தே மறுக்கமாட்டார்.

விஜயகாந்தும் பலமுறை பத்திரிகையாளர்களை மட்டம் தட்டிப்பேசியிருக்கிறார் என்றாலும், சில சமயங்களில் அவரது தரப்பில் நியாயம் இருந்தது என்பது ஒருபுறமிருக்க, பத்திரிகையாளர்களுடன் அவருக்கு இருக்கும் நீண்டகால நட்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

ஆனால் பிரேமலதாவின் உடல்மொழியில் ஒரு பண்ணையாரம்மா வேலைக்காரர்களிடம் நடந்துகொள்ளும் திமிர்த்தனம் மட்டுமே அதிகம் வெளிப்படுகிறது. அவரின் அந்த அடாவடி நடவடிக்கைக்கு காலை முதலே முகநூலிலும் இணையதளங்களிலும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. அவரது அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பில் கறுப்பு பேட்ஜ் அணியப்படும் என்று சில சங்கங்கள் பரிதாபமாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. இந்த எதிர்ப்பெல்லாம் போதாது. பிரேமலதா மன்னிப்புக் கேட்கும் வரை அவரது பத்திரிகையாளர் சந்திப்பைப் புறக்கணிப்போம் என்ற கணீர் குரல் பத்திரிகையாளர்கள் மத்தியில் எழவேண்டும். தவறினால் அடுத்தடுத்த அரசியல் தலைவர்கள் உங்களை இன்னும் அசிங்கமாக நடத்துவார்கள்.

செய்தியின் தலைப்பு... ஒரு அல்ப ஆசையில் வைத்தது...