நாடாளுமன்ற தேர்தலின் போது சில மணி நேரங்கள் சென்னையின் சில இடங்களை வலம் வந்து பிரசாரம் (!?) செய்தார் விஜயகாந்த். இதன் பின்னர் திருப்பூரில் நடந்த தே.மு.தி.க.வின் முப்பெரும் விழாவில் சில நிமிடங்கள் நின்று ஓரளவு தெளிவாய் பேசினார். இதையெல்லாம் பார்த்து ‘கேப்டன் சிங்கம் களமிறங்கிடுச்சு. இனி தே.மு.தி.க.வுக்கு ஏறுமுகம்தான். விஜயகாந்த் பின்னாடி அணிவகுக்கபோகுது சட்டமன்ற தேர்தல் வெற்றி!’ என்று ஓவராக சவுண்டு விட்டனர் அக்கட்சியினர். 

ஆனால் கடந்த தை பொங்கல் சமயத்தில் கட்சி நிகழ்ச்சிக்காக தே.மு.தி.க.வின் தலைமை கழகம் வந்திருந்த விஜயகாந்தை பார்த்து அத்தனைபேருக்கும் ஷாக். மறுபடியும் அவரது உடல்நிலையில் சரிவு உருவாகியிருப்பது தெளிவாக புரிந்தது. ஓரளவு பேச்சும், செயலும் தெளிவாகி வந்தவர் மீண்டும் ஆரோக்கியத்தில் தேய்ந்திருக்கிறார் என்பது தெளிவாகியது.

 

இது இப்படியிருக்க, கேப்டன் தேறி வருவது வரட்டும்! அதற்குள் கட்சியை தேற்றிவிட வேண்டும் என்பதில் தெளிவாகியிருக்கிறாராம் பிரேமலதா. அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோமோ இல்லையோ ஆனால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் போது தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக தே.மு.தி.க. இருக்க வேண்டுமென்பதில் குறியாகிவிட்டார். இதற்கு தனக்கு அதிகாரமிகு பதவி அவசியம் என்று நினைக்கிறார். அதனால் பிரேமலதாவின் ஆலோசனைப்படி, தே.மு.தி.க.வுக்கு சம்பந்தமில்லாத ஆனால் விஜயகாந்துக்கு மிக நெருக்கமான ஒரு வி.வி.ஐ.பி. சமீபத்தில் தமிழக முதல்வரை சந்தித்திப் பேசியிருக்கிறார். அப்போது, தமிழக  ராஜ்யசபா எம்.பி.க்கள் ஆறு பேரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அதற்கான தேர்தல் ஏப்ரலில் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. சார்பாக மூன்று எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட இருப்பதை சொல்லிக் காட்டி, அதில் ஒருவராக பிரேமலதாவுக்கு வாய்ப்பு தரச் சொல்லி சிபாரிசு செய்திருக்கிறார். 

‘பா.ம.க.வின் அன்புமணியை இப்படித்தான் ராஜ்யசபா எம்.பி.யாக்கினீர்கள். ஆனால் அவர்கள் கூட்டணியில் இருந்துகொண்டே உங்களுக்கு பெரும் குடைச்சல் தருகிறார்கள். ஆனால் தே.மு.தி.க.வோ உங்களுக்கு முழு விசுவாசமாக இருக்கிறது. தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருகிறார். எனவே இந்த நேரத்தில் நீங்கள் அவர்களுக்கு செய்யும் உதவி, ரொம்ப பெரிதாய் இருக்கும்.” என்றாராம். எடப்பாடியாரும் சிரித்துக்கொண்டே ‘பார்க்கலாம்’ என்று பதில் தந்திருக்கிறார். 

முதல்வரின் பதில் பிரேமலதாவுக்கு பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. ஆனால் அவரது சொந்த தம்பியும், தே.மு.தி.க.வின் இளைஞரணி நிர்வாகியுமான எல்.கே.சுதீஷுக்கு இதில் சந்தோஷமில்லை. ஏனென்றால் சுதீஷின் வெகுநாள் அரசியல் லட்சியமே எம்.பி.யாவதுதான். கடந்த சில தேர்தல்களில் போட்டியிட்டு தோற்றவர், எப்படியாவது ராஜ்யசபா மூலம் எம்.பி.யாகும் முடிவிலிருந்தார். 

ஆனால் தன் அக்காவே தனது கனவுக்கு எதிரியாகி இருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பிரேமலதாவின் பதவிக்காக சிபாரிசுக்கு வி.ஐ.பி. சென்ற விஷயத்தை சமீபத்தில் ஸ்மெல் பண்ணியவர், அதிருப்தியில் முறைக்க துவங்கியிருக்கிறாராம்.
ஏற்கனவே வதங்கிக் கிடக்கும் விஜயகாந்தை இந்த அக்கா - தம்பி மோதல் மேலும் கவலையாக்கி இருக்கிறதாம். 
பாவம்யா கேப்டன்!