சசிகலாவால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளார்கள். தற்போது அவரை வேண்டாம் என்று சொல்வது மனதுக்கு கடினமாக உள்ளது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

தேமுதிக சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பொது உறுப்பினர்கள், பூத் முகவர்கள், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த்;- விஜயகாந்த் அனுமதி கொடுத்து ஆண்டவன் அருள் இருந்தால் தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்று தெரியாது. ஒரு பெண் என்ற முறையில் ஒரு பெண்ணாக சசிகலா விடுதலையை வரவேற்கிறேன். ஜெயலலிதாவிற்காகவே வாழ்ந்தவர் சசிகலா.

சசிகலாவுக்கு என்று தனி வாழ்க்கை கிடையாது. அவர்களால் ஆதாயம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளார்கள். தற்போது அவரை வேண்டாம் என்று சொல்வது மனதுக்கு கடினமாக உள்ளது. அவரது விடுதலையை வரவேற்கிறேன். அவர் விடுதலையாகி வந்து தமிழக அரசியலில் பங்கு பெற வேண்டும் என்று பெண்ணாக முழு ஆதரவு தருகிறேன். சசிகலாவை ஆதரிப்பதன் மூலம் அதிமுகவை பிரேமலதா மறைமுகமாக அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அமமுக, தேமுதிக இணையும் பட்சத்தில் அதிமுகவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.