ரஜினி சொல்வது போல நிச்சயம் மாபெரும் ஒரு மாற்றம் தமிழக அரசியலில் நிகழப்போவது உறுதி எனக்கூறி பிரேமலதா கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளார்.  

ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுகுறித்து, ’’ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். விஜயகாந்திற்கும், எங்களது குடும்பத்திற்கு அவர் மேல் ஒரு மரியாதை உண்டு. ரஜினிகாந்த் தன் அரசியல் நிலையை தெளிவாக கூறிவிட்டார். கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. 

அதனால் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறுகிறார். வருகிற தேர்தலில் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு வரும். நிச்சயம் மாபெரும் ஒரு மாற்றம் தமிழக அரசியலில் நிகழப்போவது உறுதி என்பது எங்களது கருத்தும் கூட’எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் ரஜினி கட்சியுடன் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

கடந்த மக்களவை தேர்தலில் பாமகவுக்கு அளித்த அங்கீகாரத்தை தமது கட்சிக்கு அதிமுக கொடுக்கவில்லை என்கிற வருத்தத்தை தேமுதிக அவ்வப்போது வெளிக்காட்டி வந்தது. அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கொடுத்ததைப்போல தங்களது கட்சிக்கும் கொடுக்க வேண்டும் என பிரேமலதா கேட்டு வந்தார். ஆனால், அதிமுக செவி சாய்க்கவில்லை. இப்போது மூன்று பேரை ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்தது அதிமுக. அதில் ஒரு சீட்டை கேட்டு வந்தார் பிரேமலதா. ஆனால் அதிமுகவில் இருவருக்கும் ஜி.கே.வாசனுக்கும் சீட் கொடுக்கப்பட்டது.

அதிமுகவில் உள்ள மூவருக்கு கொடுத்திருந்தால் கூட ஆத்திரப்பட்டிருக்க மாட்டார் பிரேமலதா. ஆனால், தொண்டர்களே இல்லாத ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுத்து தங்களது கட்சிக்கு சீட் கொடுக்காததால் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார் பிரேமலதா. ஆகவே அதிமுக கூட்டணி இனி வேண்டாம் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அடுத்து கடந்த தேர்தலில் திமுக தங்களை அசிங்கப்படுத்தியதால் அங்கு சென்றாலும் அங்கீகாரம் கிடைக்காது என்பதால் ரஜினி ஆரம்பிக்கும் கட்சியுடன் கூட்டணி சேரலாம் என்கிற நிலைப்பாட்டில் தேமுதிக இருந்து வருவதாக கூறப்படுகிறது.