தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்னர் அரசியல் கட்சியினர் யோசிக்க வேண்டும்- பிரேமலதா அதிரடி
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோரை நேரில் சந்தித்தோம். அப்போது அவர்கள் கூட்டணி தொடர்பாக எதுவும் எங்களிடம் பேசவில்லையென பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் பிளான் என்ன.?
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என கூறப்படுகிறது. அந்த வகையில், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமையும் என தகவல் வெளியாகி வருகிறது. இந்தநிலையில் தேமுதிகவின் நிலைப்பாடு தொடர்பாக அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி எந்த நிலைப்பாட்டில் உள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்தவர் தேர்தலுக்கு இன்னமும் ஆறு மாத காலம் உள்ளது. இன்னமும் எந்த கட்சியும் தங்களது நிலைப்பாட்டை உறுதியாக சொல்லவில்லை.
தேமுதிக யாருடன் கூட்டணி.?
தேர்தல் வரும் பொழுது தங்களுடைய கூட்டணி அறிவிக்கிறோம் என்று தான் தெரிவித்துள்ளனர். எந்த தொகுதி எத்தனை தொகுதி என்பதை தேர்தல் வரும் பொழுது சொல்கிறோம் என்று தான் கூறிக்கொண்டு வருகிறார்கள். நிச்சயமாக நேரம் வரும்போது யாருடன் கூட்டணி எத்தனை சீட்டு என்பதை பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரிவிப்போம். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,
பாஜகவுடன் கூட்டணி செல்வதாக அறிவித்தது அதிமுக, கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததும் அதிமுக, இதில் தேமுதிகவின் பங்கு எதுவும் இல்லை. ஏன் பாஜகவுடன் கூட்டணி சென்றார்கள்.? கூட்டணியில் இருந்து தற்போது வெளியேறினார்கள்.? என்ற கேள்வியை எல்லாம் பாஜகவையும் அதிமுகவையும் தான் கேட்க வேண்டும் என கூறினார்.
கூட்டணிக்காக அதிமுக பேசவில்லை
அறிஞர் அண்ணாவை அண்ணாமலை விமர்சித்து பேசியதால் தான் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக ஒரு தரப்பினரும், அது காரணம் இல்லை என மற்றொரு தரப்பினரும் கூறியதாக தகவல் வெளியாகி இருப்பதாக கூறினார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோரை நேரில் சந்தித்தோம். அப்போது அவர்கள் கூட்டணி தொடர்பாக எதுவும் எங்களிடம் பேசவில்லை. தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால் அந்த கூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்ற கேள்விக்கு, இது முன்கூட்டியே கேட்கப்படுகின்ற கேள்வி. நேரம் வரும் பொழுது கூட்டணி தொடர்பாக தெரிவிப்போம்.
டிசம்பரில் கூட்டணி முடிவு
தேர்தலுக்கு ஆறு மாத காலம் உள்ளது. மூன்று மத காலத்திற்குள் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படும். தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்திற்குள் அறிவிக்கப்படும். மத்திய அரசின் செயல்பாடு உள்ளது என்று தொடர்பான கேள்வி பதில் அளித்தவர், இந்தியாவிற்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்காகவும் எதுவும் செயல்படுத்தவில்லை. தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று யோசித்துப் பாருங்கள். தமிழகத்தில் நிரந்தரமாக உள்ள பிரச்சனை தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் உள்ளது.
பாஜகவுடன் கூட்டணியை யோசிக்க வேண்டும்
கச்சத்தீவு பிரச்சனை இன்னமும் நீடித்துக் கொண்டுதான் உள்ளது. மீனவர்கள் பிரச்சனை, காவிரி பிரச்சனை, மதுரையில் எய்ம்ஸ் என பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனவே மத்திய அரசுடன் கூட்டணி வைக்கும் பொழுது அனைத்து கட்சிகளும் யோசிக்க வேண்டும். தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி என ஒவ்வொரு கட்சியும் முடிவு எடுத்தால் நிச்சயம் தமிழகத்திற்கு நல்லது நடக்கும். எனவே தமிழகத்திற்கு எந்த கட்சி நல்லது செய்கிறதோ அந்த கட்சியோடு தான் தேமுதிக கூட்டணி அமைகும் என பிரேமலதா தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்