தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது.. திமுகவை வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் சந்திரசேகர் ராவ், ஹாட்ரிக் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார்.
அங்கு உள்ள எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
பிரதமர் மோடி தான் பேசிய உரையில், தமிழகத்தில் சனாதன தர்மத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்று அந்த மாநில அரசு சூளுரைத்திருக்கிறது. இந்து மக்களின் உயிர் மூச்சான சனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டியது என்று தமிழக முதல்வரின் மகனே பகிரங்கமாக கூறுகிறார். தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்து கோயில்களை தமிழக அரசு ஆக்கிரமித்திருக்கிறது. இது மிகப்பெரிய அராஜகம் ஆகும். ஆனால் சிறுபான்மையினர்களின் வழிபாட்டுத் தலங்களை தமிழக அரசு உட்பட எந்த தென்னிந்திய மாநிலங்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லையே ஏன்?
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்து கோயில் கட்டுப்பாட்டில் இருந்து அரசு விலக வேண்டும் என்று பல மாநிலங்களில் காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறதே? காங்கிரஸுக்கு துணிச்சல் இருந்தால் தமிழகத்தில் அப்படி அவர்களால் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ், திமுக அரசுடன் கூட்டணியில் இருக்கிறீர்கள். இந்து கோயில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலக வேண்டும் என்று திமுகவிடம் நீங்கள் கூற வேண்டியதுதானே என்று அதிரடியாக கேள்வி எழுப்பினார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.