தனிகட்சி தொடங்கும் ஸ்டாலினின் ஆலோசகர்..! பிரஷாந்த் கிஷோர் பதிவால் பரபரப்பு..!
காங்கிரஸ் கட்சியில் சேரும் அழைப்பை நிராகரித்த அரசியல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர், தனிக்கட்சி தொடங்கப்போவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அவரது ட்விட்டர் பதிவு இந்த செய்தியை உறுதி செய்யும் விதமாகவே உள்ளது
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது ஐபேக் நிறுவனத்தின் மூலம் தேர்தல் வியூகங்களை வகுத்து திமுக-வை வெற்றி பெற வைத்தவர் பிரஷாந்த் கிஷோர். இதற்காக அவர் பல நூறு கோடி ரூபாயை ஊதியமாக பெற்றதாக பரபரப்பாக பேசப்பட்டது. திமுக மட்டுமல்ல, ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஜகன் மோகன் ரெட்டி வெல்லவும், முன்னர் நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வெற்றிக்காகவும் பல வியூகங்களை வகுத்தவர் அவர். மேற்கு வங்கத்தில் மம்தா, பீகாரில் நிதிஷ் குமார், டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் என்று அவரால் வென்றவர்கள் என்று கூறப்படுவோரின் பட்டியல் நீள்கிறது.
காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை
வரவிருக்கும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற இக்கட்டான வாழ்வா சாவா நிலையில் உள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியில் இணைந்து அந்த கட்சியின் வெற்றிக்காக வழிவகுத்துத் தர வேண்டும் என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்காக 3 முறை பிரஷாந்த் கிஷோர், சோனியா காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் 2024ம் ஆண்டு தேர்தலுக்கு இப்போதே வேலையை தொடங்கினால் தான் அசுர பலத்துடன் வளர்ந்து நிற்கும் பாஜகவை வீழ்த்தமுடியும் என்று கூறிய பிரஷாந்த் கிஷோர், அதற்கான செயல்திட்டத்தையும் சோனியாவிடம் முன்மொழிந்திருந்தார். அதில், அமைப்பு ரீதியாக காங்கிரஸை பலப்படுத்த பல மாற்றங்கள் தேவை என்றும், சீனியர் தலைவர்கள் பலரை மாற்றி செயல்படக்கூடியவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படவேண்டும் என்றார். இதில் தான் சிக்கல் எழுந்தது. காங்கிரஸின் பல மூத்த தலைவர்களுக்கு இந்த செயல்திட்டத்தில் உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது.
தேர்தலில் தான் எந்தக் கட்சிக்கு வேலை செய்தாலும் அந்த கட்சித் தலைமை, தான் என்ன சொன்னாலும் அதை செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போடுவது பிரஷாந்த் கிஷோர் ஸ்டைல். இந்த எதேச்சாதிகாரப் போக்கு நமக்கு சரி வராது என்று சோனியாவிடம் கூறியுள்ளனர் சீனியர் தலைகள். சோனியா - பிரஷாந்த் கிஷோர் சந்திப்பின் போதே இது வெளிப்பட்டது. நீங்கள் எத்தனை நாட்கள் கட்சியில் நீடிப்பீர்கள் என்று நக்கலான கேள்வி அவரிடம் கேட்கப்பட, நான் சொல்வதை எவ்வளவு காலம் நீங்கள் கேட்கிறீர்களோ அவ்வலவு நாள் இருப்பேன் என்றாராம் பிரஷாந்த் கிஷோர். சில நாட்களிலேயே காங்கிரஸில் தான் சேரப்போவதில்லை என்று அறிவித்தார் பிரஷாந்த் கிஷோர்.
புதுக்கட்சி தொடங்குகிறாரா பிரஷாந்த் கிஷோர்?
இந்த நிலையில்தான் பிரஷாந்த் கிஷோர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக செய்திகள் உலா வந்தன. ஆனால், தேசிய அளவில் இல்லாமல், ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைத்து கட்சி தொடங்குவார் என்றும் பேசப்பட்டது. இதற்கு தூபம் போடும் வகையில் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார் பிரஷாந்த் கிஷோர்.
அதாவது, “ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராகும் எனது தேடலையும் - மக்களை மையமாக வைத்த ஒரு கொள்கையை ஏற்படுத்தவும் எனது தேடலின் அடுத்த கட்டமாக நான் மக்களை நேரடியாக சந்திக்கப்போகிறேன். அதை பீகாரில் இருந்து தொடங்கப்போகிறேன்.” என்று கூறியுள்ளார். பீகார் பிரஷாந்தின் சொந்த மாநிலமாகும். தேர்தல் அரசியல் வியூக வகுப்பாளராகவும் அவர் முதன் முதலில் செயல்படத்தொடங்கியது பீகாரில் இருந்தே. அங்கு தற்போது ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி வெற்றி பெற கடந்த தேர்தலில் உழைத்தவரும் பிரஷாந்த் கிஷோர் தான். அரசியல் களம் இந்த ட்விட்டர் பதிவால் தற்போது அதிரத்தொடங்கியுள்ளது.