பேசிப்பேசியே வளர்ந்தவை தான் தமிழகத்தின் இரண்டு பெரிய கழகங்களும். ஆனால் இன்று அரசியல் சூழ்நிலை தலைகீழாக மாறிவிட்டது. பேச்சை குறைத்துவிட்டு சைலண்டாக காரியத்தை மட்டும் பாருங்கள் என்கிறார்கள் அரசியல் கன்சல்டண்ட்கள். இவர்களை நம்பித்தான் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளுமே பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடந்த 2014, 2019 என இரண்டு லோக்சபா தேர்தல்களிலும் தேசிய அளவில் முக்கியத்துவத்தை பெற்றவராய் இருந்தார் ஐபேக்! எனும் அரசியல் கன்சல்டன்ஸியின் உரிமையாளரான பிரஷாந்த் கிஷோர். இவரது ஸ்கெட்ச்களின் மூலம்தான் பா.ஜ.க.வே வெற்றியை அடிச்சு தூக்கியது. பீஹார் உள்ளிட்ட சில மாநில சட்டமன்ற தேர்தல்களில் இன்று ஆளுங்கட்சியாய் இருப்போரின் வெற்றியிலும் இவரது கையே அதிகம்.

இந்த சூழலில்தான் பிரஷாந்த் கிஷோரை மடக்கிட அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் ம.நீ.ம. மூன்றும் முயன்றன. ஆச்சரியமாக ம.நீ.ம.வோடு கைகோர்த்த பிரசாந்த் பின் கழன்று கொண்டார். அவரை அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டது தி.மு.க. சுமார் நூற்று எண்பது கோடிக்கு ஒப்பந்தம் போட்டு அவரை தங்களின் அரசியல் ஆலோசகர், வழிகாட்டியாக வைத்துள்ளதாம் தி.மு.க.

இப்படியொரு முக்கிய ஆளுமையை மிஸ் பண்ணிவிட்டோமே! என்று வருத்தத்தில் இருந்த அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள், குஷியாகும் வகையில் ஒரு சேதி வந்திருக்கிறது. பிரதீப் பண்டாரி எனும் செஃபாலஜிஸ்ட் இப்போது அக்கட்சிக்காக பணியாற்ற இருக்கிறாராம். அதாவது கருத்துக் கணிப்பு நடத்துவதில் கில்லி இவர். இதுவரையில் நடத்திய சுமார் பதினாறு தேர்தல் கருத்துக் கணிப்புகளில் ஒன்று மட்டும்தான் மிஸ் ஆனது, மீதி அத்தனையும் பொட்டில் அடித்தாற்போல் ரிசல்ட் அமைந்ததாம்.

சமகால அரசியல், கருத்துக்கணிப்புகளை சார்ந்தே தனது வடிவத்தை மாற்றிக் கொள்கிறது. தேர்தலுக்கு முன் மக்களின் மன நிலையை கருத்துக் கணிப்பின் மூலம் அறிந்து கொண்டே வேட்பாளர், தேர்தல் அறிக்கை, பிரசார முறை எல்லாவற்றையும் கட்சிகள் வடிவமைக்க துவங்கியுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு தரமான செஃபாலஜிஸ்டை கையில் வைத்திருந்தால்தான் சிறப்பான சம்பவங்களை ஒரு கட்சியால் அரங்கேற்றிவிட முடியும்.

அந்த வகையில் பிரதீப் பண்டாரியை அமுக்கிக் கொண்டுவிட்டது அ.தி.மு.க. இந்த தகவலை கேள்விப்பட்டுதான் குஷியாகிவிட்டனர் அக்கட்சியினர். பிரதீப் அங்கே சென்றுவிட்ட விஷயம் தி.மு.க.வுக்கும், அக்கட்சியின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோருக்கும் மிகப்பெரிய தலைவலியை உருவாக்கியிருக்கிறது. இதனால் பிரசாந்தின் வேலை இரண்டு மடங்காகியுள்ளது.