இந்திய அரசியலின் லேட்டஸ்ட் டிரெண்டிங் இதுதான். அதாவது ‘பொண்ணு பார்க்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி மண்டபத்தை புக் பண்ணு’ என்பது போல், தேர்தலில் போட்டியிட தயாராகும் முன் பிரஷாந்த் கிஷோரை புக் பண்ணு! எனும் லெவவலுக்கு நிலைமை போய்விட்டது. இந்த பி.கி. யார் என்று எல்லோருக்கும் தெரியும். எப்படி  கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து  தி.மு.க.வை ‘O.M.G.’ எனும் டீம் வழி நடத்திக் கொண்டிருக்கிறதோ! அது போலத்தான் இந்த பிரஷாந்த் கிஷோரும் ஒரு அரசியல் கன்சல்டண்ட். மோடியின் இரு முறை வெற்றி, நிதிஷ்குமாரின் வெற்றி, ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றி! என்று இவரால் ஆட்சியை கைப்பற்றிய மற்றும் ஆட்சியை தக்க வைத்த ஆளுமைகள் ஏராளம்! என்று லிஸ்டை போடுகிறது பிரஷாந்தின் டீம். 


தமிழகத்திலும் இந்த டீமின் கால்கள் பதிந்தன சமீபத்தில். கமல்ஹாசன் மற்றும் எடப்பாடியார் என இரண்டு தரப்பும் இவரை அணுகியது. ஆனால் முதலில் வந்த வகையில் கமலை டிக் பண்ணி, அவருக்காக அடிப்படை பணிகளைத் துவக்கினார் பிரஷாந்த். ஆனால் ஏதோ ஒரு பிரச்னையால் அவர்களின் டீலிங் முறிந்தது. இந்த நிலையில் தர்பார் ஷூட்டுக்காக மும்பையிலிருந்த ரஜினிகாந்த், பிரஷாந்தை அழைத்து சந்தித்தார் என ஒரு பேச்சு கிளம்பியது. பிரஷாந்திடம் ரஜினி ஒரு ரவுண்ட் பேசி முடித்துவிட்டு அனுப்பிவிட்டார், அதன் பிறகு அவர் அழைக்கவில்லையாம்! ஆனால் பிரஷாந்தோ தொடர்ந்து ரஜினியை நெருக்கிக் கொண்டிருக்கிறாராம் . ‘உங்களுக்காக ஒர்க் பண்ண விருப்பப்படுறேன்’ என்று வாண்டட் ஆக வண்டியை ஸ்டார் பண்ணுகிறாராம். இதன் பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பா.ஜ.க.வின் ஆஸ்தான அரசியல் கன்சல்டன்ட்  பிரஷாந்த்தான். அதனால்தான் அவரை தூண்டி விட்டு, ரஜினியிடம் தொடர்ந்து பேசி கன்வின்ஸ் செய்ய வைத்து, அவருக்கு நம்பிக்கையூட்டி அரசியலுக்குள் இழுக்க வைக்கிறார்கள். கட்சி துவங்கும் ரஜினியை ’பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தால் வெற்றி நிச்சயம்’ என்று கன்வின்ஸ் செய்யவும் பிரஷாந்தை பணித்திருக்கிறார்கள் என்று தகவல்கள் தடதடக்கின்றன. 


அதேநேரத்தில் இந்த பிரஷாந்துக்கு எதிராகவும் தமிழகத்தில்  விமர்சனக் குரல்கள் எழுகின்றன. தமிழக அரசியலின் மிக முக்கிய விமர்சகரான ரவீந்திரன் துரைசாமி இது பற்றி பிரபல புலனாய்வு வாரமிருமுறை அரசியல் இதழில் “குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதைதான் பிரசாந்த் கிஷோருடையது. அவர் ஓடுகிற குதிரையாக பார்த்து பயணம் செய்து வெற்றி பெறுவார். பிரதான இரண்டு கட்சிக்ளுக்குத்தான் இதுவரையில் அவர் வேலை செய்திருக்கிறார். மூன்றாவது அல்லது நான்காவது கட்சிகளுக்கு வேலை செய்ததில்லை. மோடி, நிதீஷ்குமார், ஜெகன்மோகன் ஆகியோர் பிரஷாந்த் இல்லையென்றாலும் வென்றிருப்பார்கள். அவரது யுக்தியினால் ஒரு சதவீத வாக்குகளை வேண்டுமானால் அதிகரிக்க முடியும். அடுத்த தேர்தலில் அவர் நிச்சயம் ரஜினிக்காகத்தான் வேலை பார்க்க வருவார். காரணம், ரஜினி தனது செல்வாக்கை தமிழகத்தில் அடுத்த எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். என்று நிரூபித்துவிட்டவர். 


ரஜினிக்கு வேலை பார்த்து வெற்றிக்கோட்டை தொட்டுவிட பிரஷாந்த் விரும்புவார். ஏனென்றால் ரஜினி எனும் குதிரை நிச்சயம் வெல்லும் குதிரை.” என்றிருக்கிறார். 
இந்த நிலையில் ஏதோ பிரஷாந்த் வந்தால்தான் ரஜினியால் அரசியலில் வெல்ல முடியும் என நினைத்த அவரது ரசிக பெருங்கோடிகள், இந்த உற்சாக பேச்சைப் பார்த்து ‘எதுக்குய்யா அந்த பிரஷாந்த் நம்ம தலைவருக்கு நெருக்கடி கொடுக்கணும்? நம்ம தலைவர் சிங்கிளா நின்னாலே 234 தொகுதியிலும் வெல்வார்.  தலைவர் வெற்றியில் தன்னுடைய குளிரை காய வைக்கிற பிரஷாந்தின் பாச்சா இங்கே பலிக்காது.” என்று சவுண்டு விடுகின்றனர். 
தனியா நின்னே 234 தொகுதிகளிலும் வின்னிங்கா? ப்பார்றா?