Pranab Mugarji
குடியரசு தலைவர் பிரணாப்புடன் எதிர்க்கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர்.
அவையில் அமளி
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு விவகாரங்களை எழுப்பினர். பசு பாதுகாப்பு படை என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, நாடு முழுவதும் அதிகரித்து வரும் வன்முறை, மின்னணு வாக்கெடுப்பு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகார் உள்ளிட்டவை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று சந்தித்து பேசினர்.
கோரிக்கை மனு
அப்போது, நாட்டில் நிலவும் பிரச்னைகள் குறித்து பேசிய அவர்கள், மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தனர். இதுதொடர்பாக கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் எதிர்க்கட்சி தலைவர்கள் அளித்தனர். இதற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அளித்த பேட்டியில், நாடு முழுவதும் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும், அச்ச உணர்வும் மேலோங்கி காணப்படுகிறது.
தலையிட வேண்டும்
மத்திய அரசின் போக்கை கண்டிப்பவர்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. நாட்டின் அரசியலமைப்பு ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கும், நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்வதற்கும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
