கள்ளக்குறிச்சியில் முக்கிய சீனியர் திமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பொன் முடி மகன் கவுதம சிகாமணியை எதிர்த்து, பாமக கைகொடுக்கும் என்கிற நம்பிக்கையில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ். 

ஏற்கெனவே மூன்று முறை போட்டியிட்டு தோல்வியை மட்டுமே கண்ட சுதீஷ் இம்முறை வென்றே ஆக வேண்டும் என்கிற வேட்கையில் இருக்கிறார். இந்நிலையில், தன் தம்பிக்கு ஆதரவாக, பிரசாரம் செய்வதற்காக சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு இருந்தார் விஜயகாந்த் மனைவி பிரேமலதா. 

அதற்கு முன், சேலத்தில் தனது இல்லத்தில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரேமலதா, சுதீஷ், அவரது மனைவி பூர்ணஜோதி சகிதம் சந்தித்து மனம் விட்டு பேசினர். வீட்டில், அரை மணி வெகு நேரம் ஆலோசனை நடத்திய பின் உணர்ச்சிவயப்பட்ட பிரேமலதா, 'எனக்கு அக்கா, தம்பி மட்டும் தான் இருக்காங்க. அண்ணன் இல்லை. அந்த குறையை நிவர்த்தி செய்யுற இடத்துல  அண்ணனா நீங்க கிடைச்சிருக்கீங்க' என மனமுருகி உள்ளார்.

 

பேசிக் கொண்டு இருக்கும்போதே சட்டென பிரேமலதா, சுதீஷ், அவரது மனைவி ஆகிய மூவரும், எடப்பாடியாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளனர். எழுந்த அவர்கள் 'தம்பியை கரையேற்ற வேண்டிய கடமை, அண்ணனுக்கு உண்டு. உங்களை நம்பித் தான், சேலம் மாவட்டத்தில், பல பகுதிகளை அடக்கிய, கள்ளக்குறிச்சி தொகுதியை, சுதீஷ் தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே, மூன்று முறை சுதீஷ் தோல்வி அடைந்துள்ளார். இந்த முறை, வெற்றி கணக்கை, உங்கள் மூலம்தான், சுதீஷ் தொடங்க வேண்டும்' என, பிரேமலதா கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார். 

அடுத்து கள்ளக்குறிச்சி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு போன்போட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதீஷுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டாராம்.