Prakash Raj said You have to pay a spoiled money
சசிக்குமாரின் மச்சான் இறந்த பஞ்சாயத்தின் பதற்றம் இன்னமும் கோலிவுட்டில் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. அன்புவுக்கு சாதகமாகவும், எதிராகவும் தினமும் நட்சத்திரங்கள் கருத்துக்களைக் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
அன்புச்செழியனுக்கு எதிராக பேசுபவர்கள் ஆன் தி வேயில் அரசியல்வாதிகளையும் போட்டுப் பொரிக்க தவறுவதில்லை. அந்த வகையில் அசோக்கின் மரணத்துக்குப் பின் சினிமா துறையை நோக்கி அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கும் சூடேற்றும் வார்த்தைகளுக்கு ரியாக்ட் செய்திருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ்...
“அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து அவர்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து நாட்டை நடத்தலாமே! மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை ஓரிடத்தில் வைத்து, தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு கொடுத்து உதவலாமே? பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு, பொறுப்பே இல்லாமல் பேசுவது இந்த அமைச்சருக்கு (ஜெயக்குமாருக்கு) அழகா?” என்றிருக்கிறார்.

அதேபோல் “திரையுலகை பல விஷயங்கள் போட்டு நெரிக்கிறது. எந்த வெளிப்படை தன்மையுமில்லை. தியேட்டரில் எத்தனை பேர் படம் பார்க்கிறார்கள் என்கிறார்கள் என்கிற உண்மையான கணக்கை எந்த தியேட்டர்காரரும் தயாரிப்பாளருக்கு தருவதில்லை. இது போதாதென்று கேபிள் டி.வி, திருட்டு டி.வி.டி. என்று புதிய படங்களை அவிழ்த்து விட்டால் கோட்டிகோடியாய் கொட்டி படமெடுத்த தயாரிப்பாளரின் நிலை என்னாகுமென யோசியுங்கள்
இன்று அசோக்குமாரின் சாவு நமக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு எத்தனையோ தயாரிப்பாளர்களின் தற்கொலைகள் நம் கவத்துக்கே வராமல் மறைக்கப்பட்டிருக்கின்றன. சொந்த வீட்டையே விற்றுவிட்டு நடுத்தெருவில் நிர்கதியாக நிற்கும் தயாரிப்பாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் என்ன செய்ய போகிறோம்?
நாம் உட்கார்ந்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று கொதித்திருக்கிறார்.
