காவிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மேலாண்மை வாரியம் வேண்டும் என தமிழ்நாட்டில் போராட்டங்கள் வலுத்துவருகின்றனர். மேலாண்மை வாரியத்தை அமைக்ககூடாது என்பதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இந்த பிரச்னையை தீர்த்து வைக்க மத்திய அரசு, மௌனம் காக்கிறது.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள பிரகாஷ் ராஜ், இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீரில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது. 

நைல் நதியை எகிப்து, எத்தியோப்பியா, சூடான் ஆகிய மூன்று நாடுகளும் சுமூகமாக பகிர்ந்துகொள்கின்றன. ஆனால், ஒரே தேசத்துக்குள் இருக்கின்ற சகோதர மாநிலங்களால் தண்ணீரை சுமூகமாக பகிர்ந்துகொண்டு நட்போடு இருக்க முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதற்கு ஓட்டு அரசியல் இன்றி வேறு காரணங்கள் இல்லை.

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையில் அரசாங்கங்கள் கண்ணாமூச்சி ஆடுவது மக்களை ஏமாற்றும் செயல். காவிரி என்பது வெறும் நீராதாரம் மட்டுமல்ல. பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம். காடுகள், மலைகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் காவிரியால், ஓட்டுக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகளின் சூழ்ச்சியை கடக்கவே முடியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகிற கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக மக்களைப் பிரித்து மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர்.

அரசியல் தலைவர்கள் தீர்வு தேடுவதில் அக்கறை காட்டாமல் உணர்ச்சிகளைத் தூண்டி கலவரம் செய்து குழம்பிய குட்டையில் அதிகார மீன்களை பிடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் மாஃபியாக்களுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடுவதில்லை.

இனிமேலும் இந்த நதிநீர் அரசியல் தொடர்ந்தால் அது மீட்க முடியாத இழப்புகளைத் தரும் பேராபத்தில் முடியும். கேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டிருக்காமல் தீர்வு தேடுகிற ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவதும் அவசியமாகிறது. காவிரி நீர் பங்கீட்டில் இருக்கும் உண்மையான பிரச்னைகளையும், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளையும் தமிழக மற்றும் கர்நாடக மக்களுக்கு விளக்குவது அவசியமாகிறது.

இரு தரப்பிலும் சமூக அக்கறை கொண்ட வல்லுநர்களின் துணையுடன் ஒரு ஆவணப்படம் எடுக்கும் முயற்சியை Just asking Foundation எடுக்கிறது. உண்மைகள் மக்களைச் சேர அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம்.

ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஒரு நதிநீரைக் குடித்து, அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறல்ல. நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும் என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.