தேர்தல் அறிக்கையாக அதிமுக அறிவித்து இருந்த வாக்குறுதியை தேர்தலுக்கு பின் பாஜக அரசு மறுத்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வுகள் நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில் தமிழகத்துக்கு விலக்கு இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறும்போது, ‘’நீட் தேர்வை அனைத்து மாநிலமும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு என்பது அளிக்க இயலாது. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

நீட் மாணவர்களிடம் சோதனை நடத்துவது என்பது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடத்தப்படுகிறது. எனவே தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது. தமிழகம் முதன்மை நீட் தேர்வினால் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி மாணவர்கள் படிக்கும் நிலை குறைந்துள்ளது. டிஜிட்டல் கல்வி முறையில் கல்வியில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது.

தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். தமிழகம் பிற மாநிலத்துக்கு முன்னோடியாக திகழ்கிறது’’ என அவர் தெரிவித்தார். தேர்தலுக்கு முன்  இதே கருத்தை அமைச்சர் பியூஷ் கோயலும் தெரிவித்து இருந்தார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் பாஜகவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கு அக்கட்சியும் தங்களால் முடிந்த உதவியை செய்வதாகவும் கூறியிருந்த நிலையில் தமிழகத்துக்கு நீட் விலக்கு இல்லை என இரு மத்திய அமைச்சர்கள் கூறியிருக்கின்றனர்.

 

இது குறித்து அரசியல் ஆர்வலர்கள், மக்களவை தேர்தலுக்கு முன் நீட் தேர்வு குறித்து அமைதியாக இருந்து விட்டு தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் பழைய கெடுபிடியே தொடரும் என இப்போது பாஜக அரசு வாய் திறந்துள்ளது. தேர்தலுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தை பாஜக வெறுக்கத் தொடங்கி உள்ளது எனக் கூறுகின்றனர்.