’மாற்று அரசியல்!’ எனும் கொள்கையுடன் நாம் தமிழர்! கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் சீமான் மீது தமிழகத்தில் மற்ற கட்சியின் தலைவர்களும், அரசியலுக்கு வர இருக்கின்ற நடிகர்களின் ஆதரவாளர்களும், பல இயக்கங்களின் செயல்பாட்டாளர்களும் மிக கடுமையான விமர்சனம் வைப்பது தெரிந்த கதையே. சீமானுக்கு சர்வதேச அளவில் பெயர் பெற்றுக் கொடுத்திருக்கும் ‘ஈழம் சென்று பிரபாகரனை சீமான் சந்தித்திருக்கிறார்!’ எனும் தகவலை அடித்து நொறுக்கி, அது பொய்! என்று நிரூபிப்பதாக சவால் போட்டுக் கொண்டு சில கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். 

ஈழத்தில் ஆமைக்கறி சாப்பிட்டதாக சீமான் சொல்லியதை வைத்தும் அவரை  கிண்டலடித்துக் கவிழ்க்கின்றனர். தனக்கு எதிராக சூழல் இப்படி போய்க் கொண்டிருக்கும் நிலையில், பிரபல வாரம் இரு முறை இதழொன்றில் தொடர் எழுதி வரும் சீமான் அதில், ஈழம் சென்ற தன்னை பிரபாகரன் தங்க வைத்த இடம் பற்றி சொல்லி ஒரு புது பீதியை கெளப்பியிருக்கிறார். 

 

அப்படி என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா?....... ”ஈழத்தில் நான் இருந்தபோது எனது ஒவ்வொரு நொடி நிகழ்வையும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது தளபதிகள் மூலம் கேட்டுக் கொண்டே இருந்தார். எனக்கு என்ன உணவு பிடிக்கும் என தெரிந்து, அதை சமைத்து வழங்கச் சொல்லியும் அன்புக் கட்டளை இட்டிருந்தார். தெரிந்தவர்களை எல்லாம் நான் சந்தித்துவிட முடியாது. நான் யாரைப் பார்க்க வேண்டும், யாரை சந்திக்க வேண்டும், எங்கு சாப்பிட வேண்டும், எங்கு ஓய்வெடுக்க வேண்டும்? என்பதையெல்லாம் கூட அவரது உத்தரவின் படி, தம்பிகளின் உதவியோடு நிறைவேற்றப்பட்டன. 

இந்த நேரத்தில் இரவு வந்தது. நான் எங்கு? எந்த தளபதியின் வீட்டில் தங்கப் போகிறேன்! என்று புரியாத புதிராய் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னை தலைவர் பிரபாகரனின் உத்தரவின் படி, அலுவலகம் போன்ற ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அதை எனக்காக திறந்துவிட்டு ‘அண்ணா இங்கே தளபதிகளோ, தம்பிகளோ வரமுடியாது. தலைவர் இங்கேதான் உங்களை தங்கச் சொல்லி இருக்கிறார். நீங்கள் தனியாகத்தான் இங்கே தங்க வேண்டும். இங்கே யாரும் உங்களை கேள்வி கேட்க மாட்டார்கள்.  நீங்கள் ஓய்வெடுங்கள், காலையில் உத்தரவு வந்ததும் உங்களை அழைத்துச் செல்கிறோம்.’ என்றார்கள். 

நான் அந்த அலுவலகத்தை விநோதமாக பார்த்தபோது ஒரு தளபதி ‘ சிங்கள இராணுவம் குண்டு வீசாத இடம் இங்கே இது மட்டும்தான். அண்ணன் உங்களுக்காக எப்படிப் பட்ட பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்திருக்கிறார் பாருங்கள்.’ என்று மேலே பார்த்து பேசினான் ஒரு தம்பி. நான் அந்த இடத்தை நிமிர்ந்து பார்த்ததும், என் இரத்தம் உறைந்து போனது. காரணம் அது சிங்கள மாவட்ட ஆட்சியரின் அலுவலகம்.” என்று குறிப்பிட்டுள்ளார் சீமான். பிரபாகரனை சீமான் சந்திக்கவேயில்லை! என்று சில தரப்பினர் பரப்பி வரும் வேளையில், சீமான் தன்னை பிரபாகரன் ஈழத்துக்கு அழைத்து வைத்து, எப்படியெல்லாம் உபசரித்தார் என்று திகிலும், புதிரும், ஆச்சரியமும் கலந்து விளக்கி வருவது பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.