Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் வேலுமணி, அன்பழகனுக்கு எதிராக போர்க்கொடி: முதல்வருக்கு தலைவலி கொடுக்கும் பழனியப்பன்!

ex minister palaniappan voice against ministers anbalagan avd velumani
ex minister palaniappan voice against ministers anbalagan avd velumani
Author
First Published May 19, 2017, 6:27 PM IST


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கட்சியிலும், ஆட்சியிலும் எண்ணற்ற மாற்றங்கள் வந்து விட்டன. ஆனால், தொடர்ந்து நீடித்து வரும் சிக்கல்கள் மட்டும் குறைந்தபாடில்லை.

ஜெயலலலிதா இருந்த வரை, அம்பிகளாக இருந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும், இன்று அன்னியன்களாக மாறி, முதல்வர் பழனிச்சாமிக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

குறிப்பாக, எடப்பாடியின் கொங்கு சமூகத்தை சேர்ந்த, முன்னாள் அமைச்சர்களின், நெருக்கடிக்கு ஈடுகொடுக்க முடியாமால் தினந்தோறும் விழி பிதுங்கி நிற்கிறார் எடப்பாடி.

ஏற்கனவே, கரூர் செந்தில் பாலாஜியும், தோப்பு வெங்கடாச்சலமும், தங்களுக்கு தலா 10 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு இருப்பதால், அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்றால் எதிராக செயல்படுவோம் என்று அச்சுறுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில், பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பனும், தமக்கு 10 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறி, பாலக்கோடு  அன்பழகனையும், வேலுமணியையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

கடந்த முறை, உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பழனியப்பன், 2016 தேர்தலில், பாலக்கோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அன்பழகன், வெற்றி பெற கூடாது என்று, மறைமுகமாக வேலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதையும் மீறி அவர் வெற்றி பெற்றதால், அன்பழகனுக்கே அமைச்சர் பதவி வழங்கினார் ஜெயலலிதா. அதனால், ஜெயலலிதா இருந்தவரை, அடக்கி வாசித்த பழனியப்பன், தற்போது எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்து விட்டார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில், கடைசிவரை பாமக வேட்பாளரை விட 13 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி இருந்த பழனியப்பன், கடைசி ஒரு மணி நேரத்தில், எப்படி கூடுதலாக வாக்குகளை பெற்று ஜெயித்தார் என்றும்   தொகுதியில் மக்கள் இன்னும் பேசிக்  கொண்டிருக்கின்றனர்.

இருந்தாலும், ஜெயலலிதா இல்லாத நிலையில், பழனியப்பனை கட்டுப்படுத்தும் தலைமை அதிமுகவில் இல்லை. மேலும், அன்பழகன் அமைச்சராக இருப்பதையும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அதனால், தமக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று நேரடியாக கேட்காமல், அன்பழகன், வேலுமணி ஆகிய இரு அமைச்சரையும் நீக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். 

தமது கோரிக்கைக்கு முதல்வர் செவி சாய்க்கவில்லை என்றால், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோருடன் இணைந்து, 30 எம்.எல்.ஏ க்கள் ஆதரவுடன் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க போவதாகவும் பழனியப்பன் கூறி வருகிறாராம்.

30 எம்.எல்.ஏ க்கள் பெரிதா? இரண்டு அமைச்சர்கள் முக்கியமா? என்பதை முதல்வரே தீர்மானிக்கட்டும் என்று பழனியப்பன் கூறி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொருவரையும் திருப்தி படுத்த வேண்டுமெனில் 50 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாக வேண்டும். எனவே, முதல்வர் எடப்பாடி இதை எப்படி சமாளிக்க போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios