சிக்கன்  சாப்பிட்டால்  கொரோனா வரும் என்பதை யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்கப்படுமென கோழிப்பண்ணை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது .  முட்டை மற்றும் கோழி இறைச்சி  வரலாறு காணாத அளவுக்கு தேக்கம் அடைந்துள்ள நிலையில்  இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .  சீனாவில் தோன்றிய கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  இந்த வைரஸ் பரவியபோது அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது .  இந்நிலையில் இந்த வைரஸ் குறித்து இந்தியாவில் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது .  கோழி இறைச்சி மற்றும் முட்டை போன்றவற்றிலிருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது என சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது . 

இந்நிலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டை உள்ளிட்டவைகளை வாங்குவதை  மக்கள்  வெகுவாக தவிர்த்துவிட்டனர்.  இதனால் பிராய்லர் கோழி  இறைச்சி மற்றும் முட்டை உள்ளிட்டவைகள் தேக்கம் அடைந்துள்ளன . எனவே குறைந்த விலையில் சிக்கன் விற்பனை செய்யப்படும்  நிலை உருவாகியுள்ளது .  அதே நேரத்தில் சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்  கோழிப்பண்ணை உரிமையாளர் சங்கத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பல்வேறு விழிப்புணர் பிரச்சாரங்களை அச்சங்கத்தில்  சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது .  இந்நிலையில் சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பரவும்  என்பதை யாராவது  நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்குவதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து முட்டை கோழி  பணியாளர் வர்த்தக சங்க நிர்வாகி சுப்பிரமணியன் கூறுகையில் , கொரோனா பீதி காரணமாக நாமக்கல்லில் 12 கோடி முட்டைகள் தேக்கம டைந்துள்ளன .  பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மேலும் நாலு கோடி முட்டைகள் தேக்கம் அடையும் நிலை உருவாகியுள்ளது,  அதாவது கோழி இறைச்சி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்று யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஒரு கோடி பரிசு வழங்க தயாராக  உள்ளோம் .   ஒரு கிலோ 90 க்கு விற்பனையான கறிக்கோழி தற்போது 50க்கு கீழ் இறங்கிவிட்டது .  இதற்கு காரணம் சமூக ஊடகங்களில் வதந்தி  பரப்பப்படுவது தான் ,  வதந்தி பரப்பிய 4 பேரை கைது செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எங்களது மனமார்ந்த நன்றி என அவர் தெரிவித்தார்.