தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தற்போது கொரோனா காலம் என்பதால், அதையொட்டி தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் ஒன்றாக, 80 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்களுக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்கும் சலுகையை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதன்படி தேர்தல் நடத்தும் அதிகாரி, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குகளைப் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.


இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றன. அண்மையில் பீகாரில் நடந்த முடிந்த தேர்தலில் இதே முறை பின்பற்றப்பட்டது. இறுதியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தபால் வாக்குகள் தீர்மானித்தன. சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 15 தொகுதிகளை பாஜக கூட்டணியிடம் ஆர்ஜேடி கூட்டணி இழந்தது. இதனால், ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது. எனவே, தேர்தல் நடத்தும் அதிகாரி நேரிடையாக சென்று வாக்குகளைப் பெறும் முறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.


தேர்தல் நடத்தும் அரசு அதிகாரி, மேலதிகாரிகளின் பேச்சை கேட்க வேண்டிய நிலையில் இருப்பார்கள் என்பதால், அவர்கள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவார்கள் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 13.78 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக திமுக எம்.பி. டெல்லியில்  தேர்தல் ஆணையத்தில் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். அதில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக வாக்குச்சாவடி அமைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 14  தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. எனவே, இந்த விஷயத்தில் தமிழக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்க்கத் தொடங்கியுள்ளன. தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.