கடந்த 14ம் தேதி நடைபற்ற அஞ்சல் துறைக்கான தேர்வு ரத்து செய்யப்படுகிறது, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலம் இந்தியில் தேர்வு நடைபெற்றதால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராஜ்யசபாவில் காலை முதல் அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக இன்று காலை மாநிலங்களவை கூடியதும், தபால் துறை தேர்வில் தமிழ் நீக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், தபால்துறை தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டும் அதிமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

இதனால், அவையை நண்பகல் வரை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடியதும் அதிமுக எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை மீண்டும் நண்பகல் 12.21 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டது.