தமிழகத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக விவசாயிகள் கடந்த 30 நாட்களாக  டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தொடர்ச்சியாக சந்தித்து வந்தார். 

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை பொன்.ராதாகிருஷ்ணன்  மீண்டும் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய பொன்னார், விவசாய கடன்களை தமிழக அரசு தான் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். விவசாயிகள் தயவுசெய்து போராட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்தார். 

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக என்னுடைய சொந்த அலுவலக பணிகளையும் விட்டு விட்டு இங்கு வந்து காத்திருந்தேன். விவசாயிகளின் கோரிக்கைகளை எழுத்துப் பூர்வமாக கேட்டேன். ஆனால் விவசாயிகள் என்னை காத்திருக்க வைத்து அவமானப்படுத்திவிட்டனர். என்னைப் போல அவமானப்பட்ட அமைச்சர் எவரும் இல்லை என குற்றம்சாட்டினர்.. 

ஆனால் பொன்னாரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள  அய்யாக்கண்ணு, அமைச்சரை அவமானப்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், போலீசார் தடுத்ததாலேயே உரிய நேரத்தில் எங்களால் அவரை சந்திக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்..