சத்துணவுக்கு முட்டை வழங்க கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமே 4000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ள நிலையில் 5000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது அவர் மிகப் பெரிய காமெடியனாக இருப்பார் போல என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சென்னை வந்த பாஜக தலைவர் அமித்ஷா, இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழலில் முதல் இடம் வகிக்கிறது என கொளுத்திப் போட்டுவிட்டு சென்றார். இதைத் தொடர்ந்து தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக அரசை கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ,  சத்துணவுக்கு முட்டைகள் சப்ளை செய்த விவகாரத்தில் 5000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில்  அமைச்சர் ஜெயகுமார், தியாகிகள் தினத்தையொட்டி தியாகிகளின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து  பொன்.ராதாகிருஷ்ணப் பேச்சுக்கு பதிலடி கொடுத்த அவர், கடந்த 4 ஆண்டுகளில் சத்துணவுக்கு முட்டை வழங்க மொத்தமே 4000 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும்போது 5000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது இந்த ஆண்டின் மிகப் பெரிய காமெடி என்று கலாய்த்தார்.

இதிலிருந்து பொன்.ராதாகிருஷ்ணன் பெரிய காமெடியனாக் இருப்பார் என்று நினைக்கிறேன் எனவும்  அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். அதிமுக அரசை தகுந்த ஆதாரங்களுடன் குறை சொல்ல வேண்டும் என்றும் தேவையில்லாமல் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.