மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார்.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்மரம் காட்டி வருகின்றன. அதிமுகவில் தேர்தல் கூட்டணியில் இன்று அல்லது நாளை தேமுதிக இணைந்ததும் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும். அதன்பிறகு அதிமுக போட்டியிடும் தொகுதி விவரங்கள் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. எந்தெந்த தொகுதியில் யார்-யார் போட்டியிட உள்ளனர் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அதிமுக அமைப்பு செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த ஒரு மாத காலமாக  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக தமிழகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சனைகளை அறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளனர். விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

 

ஆங்கிலம்-தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையை தலைமை கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் இன்று சமர்ப்பித்தார். தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைவது தாமதமாகி வந்தாலும் அதிமுக இனி தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தப்போவதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.