பாஜக துணைத் தலைவர் கனகசபாபதியை பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான க.பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.கனகசபாபதியை, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக தமிழக ஆளுநர் நியமித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே அவர், “பாஜகவின் அறிவுசார் அணி”யின் துணைத் தலைவராகப் பணியாற்றிய போதுதான், இப்பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறுவதற்கு ஒரு மாதம் முன்பு, தமிழக பாஜகவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இப்போது, மீண்டும் மூன்று ஆண்டுகளுக்கு, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக - இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.


பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 3 சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம், 'வேந்தர்' என்ற முறையில் தமிழக ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்படி, 'பாரதியார் பல்கலைக்கழகச் சட்டம் - 1981'- ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், “கல்வி வல்லுநர்களை” சிண்டிகேட் உறுப்பினர்களாக நியமிப்பதற்குத்தானே தவிர, பாஜக துணைத் தலைவர் ஒருவரை நியமிக்க அல்ல! அரசியல் கட்சியில் உள்ளவரை, பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க அந்த அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தியிருப்பது, மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும்.

பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக கனகசபாபதியை நியமித்த உத்தரவை, ஆளுநர் திரும்பப் பெற வேண்டும். அப்படியில்லையென்றால், உயர்கல்வித் துறை அமைச்சரோ அல்லது முதல்வரோ ஆளுநருக்கு அதற்கான அழுத்தத்தைக் கொடுத்து, பாஜக துணைத் தலைவரை, பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என அறிக்கையில் பொன்முடி தெரிவித்துள்ளார்.