துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு செக் வைத்தது போலவே பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணிக்கும் ரெய்டு சிக்கல் உருவாக்கப்படும் என்று அவரது கட்சியினரே பெரிதாய் எதிர்பார்த்தனர். ஆனால் நூல் இழையில் எஸ்கேப் ஆனார் சிகா. மகன் தலை தப்பியதில் பொன்முடிக்கு ஏக சந்தோஷம். 

தேர்தலில் ஜெயிப்போமா அல்லது தோற்போமா எனும் கவலை ஒரு புறம் இருக்கட்டும், இப்போதெல்லாம் தேர்தல் நடக்குமா இல்லை ரத்தாகுமா? என்பதுதானே பெரிய கேள்வியாக இருக்கிறது. ஆக, அந்த வகையில் தன் மகனின் தொகுதி சிக்கலின்றி தப்பித்ததுதான் பொன்முடிக்கு போன உயிர் திரும்பி வந்த ஃபீலிங். 

ஆக பாதுகாப்பான ஜோனுக்குள் போய் நின்று கொண்டிருக்கும் பொன்முடி இப்போது ஆளுங்கட்சி மீது மிக ஆவேசமான சாடல்களை அள்ளி வீசியிருக்கிறார் இப்படி...”மோடி இருக்கும் தைரியத்தில் அ.தி.மு.க. கொக்கரிக்கிறது. பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தியதை பலமாக நினைக்கிறார்கள். ஆக்சுவலாக அது மிக மிகப்பெரிய பலவீனம், தோல்வி. மோடிக்கு எதிராக தேசம் முழுவதுமே அலை வீசுகிறது. ஆனால் தமிழகத்திலோ அவருக்கு எதிராக மக்கள் மனதில் சுனாமியே அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மோடியை முன்னிறுத்தியும், பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைத்தும் தேர்தலை சந்தித்திருக்கும் அ.தி.மு.க. வானது மிக கேவலமான தோல்வியை இந்த தேர்தலில் சந்திக்க இருக்கிறது. 

இடைத்தேர்தலிலும் தோற்று ஆட்சியை இழக்கப்போகிறீர்கள் இந்த தேர்தல் முடிவோடு. அதன் பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு அரசியல் வாழ்க்கை என்பதே இல்லை. எதிர்கட்சியாக அமரும் லாயக்கு கூட அற்றவர்களாக போகப்போகிறீர்கள். அதனால் அணையப்போகும் விளக்கு ஓவராய் பிரகாசிப்பது போல் ஆட்டம் போடாதீர்கள், அடங்குங்கள்.” என்று பொளந்து கட்டிவிட்டார். 

எப்போதும் இல்லாத திருநாளாக திடீரென அ.தி.மு.க. மீது இப்படி ஆவேச பாய்ச்சலை பொன்முடி காட்டியிருப்பதை கண்டு தி.மு.க.வினரே திகைத்துக் கிடக்கின்றனர். அ.தி.மு.க.வினரோ “பொன்முடியின் இந்த பாய்ச்சலுக்கு பின்னணி என்ன? துரைமுருகனோடு சேர்த்து இவரையும் முடிச்சு விட்டிருக்கணும்.” என்று கருவிக் கொண்டிருக்கிறார்கள்.