மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக கூறியும் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பபெற வலியுறுத்தியும்  புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்று வரும் தர்ணா போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்கள் நலத்திட்டங்களை செயல்டுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாகவும், அவரை மத்திய அரசு திரும்பபெறக்கோரி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தது. இதோபோல் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாத முதலமைச்சர் நாராயணசாமி இல்லத்தை முற்றுகையிடப்போவதாக பாஜக அறிவித்து இருந்தது. 

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக 144 தடை சட்டம் அமலில் உள்ளதால் ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை, தலைமை செயலகம், முதலமைச்சர் இல்லம் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுல்லதாகவும் மேலும் மீறி போராட்டம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. மேலும் போராட்டம் காரணமாக கலவரம் ஏற்படாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இந்நிலையில் ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

 

தர்ணாவில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். துணைநிலை ஆளுநருக்கு எதிராக நடைபெற்று வரும் தர்ணாவை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக புறக்கணித்துள்ளது. துணைநிலை ஆளுநருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அண்ணா சிலை சுற்றியுள்ள பகுதிகளில் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.