இந்திய அளவில் பெரும் அச்சங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோயின் பாதிப்பு 22 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா வைரஸின் வீரியத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மூலம் இரவு பகல் பாராமல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தபோதும் மருத்துவ பணியாளர்களின் தன்னலமற்ற சேவை காரணமாக  நோயின் பாதிப்பில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 5,012 பூரண நலம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 752 குணமடைந்துள்ளனர்.

புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கு இதுவரை 7 பேர் பாதிக்கப்பட்டு மூவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் நேற்று முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு சிறப்பு முகாமில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி முதல் நபராக பரிசோதனை செய்து நிகழ்வை தொடங்கி வைத்தார். முதல்வர் உள்ளிட்ட அனைவரும் நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டிருப்பதால் பரிசோனை செய்யப்பட்டதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தியும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வந்தார். அப்போது பரிசோதனை செய்து கொண்டிருந்த மருத்துவர்களின் காலில் விழுந்து அவர் சேவைக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து கூறிய அவர், தனது தொகுதியில் இருக்கும் 5 பகுதிகள் தனிமைப்படுத்த பகுதியாக நீடிப்பதாகவும் அங்கு மருத்துவர்களின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாகவும் கூறினார். அவர்களுக்கும் தொற்று ஏற்படக் கூடிய நிலை இருந்தும் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றும் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவைக்கு தலை வணங்கும் விதமாக காலில் விழுந்து நன்றி தெரிவித்ததாக ஜெயமூர்த்தி குறிப்பிட்டார். சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மருத்துவர்களின் காலி விழுந்து வணங்கிய செயல் அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.