நாக்கு தடித்த நாஞ்சில் அன்பழகனுக்கு ரெய்டு செக்!: பயங்கர கடுப்பில் பா.ஜ.க! பொளந்து கட்ட ரெடியாகும் பொன்னார். 

அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையில் உள்ளாட்சி உரசல் உச்சம் தொட்டு, இப்போது ’கூட்டணியே பிளவு படுகிறதா?’ என்று அக்கட்சிகளே யோசிக்கும்  அளவுக்கு போய் நிற்கிறது விவகாரம். இதில் குறிப்பாக, தமிழக பா.ஜ.க.வின் மிக முக்கிய தலைவரான பொன். ராதாகிருஷ்ணனை அ.தி.மு.க.வின் ஒரு  சிறிய நபரான நாஞ்சில் அன்பழகன் என்பவர் மிக கடுமையாக தாக்கி, விமர்சித்த விவகாரம் பெரும் பிரச்னையாக மாறி நிற்கிறது. 

’நாங்கள் தனித்து நின்றிருந்தால் கூடுதலாக வென்றிருப்போம்’ என்று  பொன்னார் சொல்லியிருந்தார் உள்ளாட்சி தேர்தல் முடிவை பற்றி. இதன் மூலம் தங்களை அவர் பெரிதாய் உரசிவிட்டதாக ஆளுங்கட்சியினர் நினைத்தனர். ஆனாலும் இதற்கு அ.தி.மு.க. தரப்பிலிருந்து முக்கிய நபர்கள் யாருமே  ரியாக்ஷன் காட்டவில்லை. 

மாறாக கன்னியாகுமரியின் கிழக்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், திரைப்பட இயக்குந(என்று தன்னை சொல்லிக் கொள்பவ)ருமான நாஞ்சில் அன்பழகன் என்பவர் ரொம்ப ஓவராய் பொன்னாரை புண்படுத்தி பேசிவிட்டாராம். அப்படி என்ன பேசினார் தெரியுமா அன்பழகன்?....”பொன்னாருக்கு ஆணவம் அதிகமாக இருக்கிறது. ‘வாதத்தில் தோற்பவன் அவதூறைக் கையில் எடுப்பான்’ என்று சாக்ரடீஸ் சொல்வார். அது போல பொன்னார் அவதூறு பரப்பி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ மக்களிடம் பா.ஜ.க.வுக்கு ஓட்டு கேட்க போக  நாங்கள் தயங்கிட வேண்டியதாய் இருந்தது. அ.தி.மு.க.வை நம்பித்தான் பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களித்தனர். இந்த பொன்னாரோ தன் கட்சி வேட்பாளர்களுக்கு செலவு கூட செய்யவில்லை பிரசாரத்தில். நாங்கள்தான் அவர்களுக்கு செலவுகளை கவனித்தோம்.

 பொன்னார் போன்றோரின் நன்றி மறந்த ஏளனத்தை எதிர்கொண்டு, பெரும் வெற்றியை பெற்றுள்ளது அ.தி.மு.க.” என்று விட்டு விளாசிவிட்டார் ஒரு பேட்டியில். 

இதை வாசித்த பா.ஜ.க.வினர் கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டனர். அக்கட்சியின் இணையள அணியினர் நாஞ்சில் அன்பழகனையும், அ.தி.மு.க.வையும் போட்டுப் பொரட்டி எழுத துவங்கியுள்ளனர். அதில் ஹைலைட்டாக “நாக்கு தடித்த நாஞ்சில் அன்பழகனே! நீ யார்?  அ.தி.மு.க.வின் அன்றாடங்காச்சியாக வாழ்க்கை நடத்தும் நீயெல்லாம் மத்திய அமைச்சரவையை அலங்கரித்த பொன்னாரை பற்றி பேசலாமா? வாழும் காமராஜர்தான் பொன்னார். 

ஆனால் வாய்த்துடுக்கில் நீ அவரைப் பார்த்து ‘ஆணவம் அதிகமாயிடுச்சு!’ என்பாயா? உங்கள் கட்சியின் ஆட்சி ஓடுவதே எங்களின் புண்ணியத்தில்தான் என்பதை மறந்துவிட்டாயா? ஜெயலலிதா காலமான சில நாட்களிலேயே உங்கள் ஆட்சியும் காலாவதியாகிவிட்டது, ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்த இந்த அரசை எங்களின் மத்திய அரசுதான் தோள் கொடுத்து ஓட்டிக் கொண்டிருக்கிறது. 

ஆட்சி இருப்பதால்தான் உங்கள் அ.தி.மு.க.வில் இத்தனை கூட்டம் இருக்கிறது. அது முடிந்ததும் கல் விழுந்த மரத்தின் காக்கைகள் சிதறிப் பறப்பது போல் ஓடிவிடுவீர்கள், பசையுள்ள மரத்தைப் பார்த்து!

ஆனால் நீயெல்லாம் எங்கள் பொன்னாரை பார்த்து பேசுகிறாய், இந்த லட்சணத்தில்.” என்று வெச்சு செய்திருக்கின்றனர். 

இந்த சூழலில், நாஞ்சில் அன்பழகனின் சொத்து பத்து விபரங்கள் உள்ளிட்ட அத்தனையுமே விலாவாரியாக பா.ஜ.க.வால் எடுக்கப்பட்டுவிட்டது. அநேகமாக கூடிய விரைவில் நாஞ்சில் அன்பழகன் மீது ரெய்டு புலி பாயலாம்! என்கிறார்கள். தன்னை விமர்சித்ததற்காக அன்பழகன் மீது பொன்னாருக்கு எந்த வருத்தமுமில்லையாம், மேலும  அவரை ஒரு பொருட்டாகவே அவர் எடுத்துக் கொள்ளவில்லையாம். 

ஆனால் அதேவேளையில் இந்த அன்பழகனின் பேச்சால் அ.தி.மு.க.வுக்கு கடும் இடைஞ்சல் உருவாகியுள்ளது.  ‘ ஒரு மாஜி மத்தியமைச்சரை இப்படியா மோசமா விமர்சிப்பது உங்கள் கட்சி நபர்?’ என்று டெல்லியிலிருந்து இரு முதல்வர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறாரகள். இதில் டென்ஷனான எடப்பாடியார் ‘ யார் அந்த அன்பழகன்? ஏன் இப்படி பேசுறார்?’ என்று கொதித்திருக்கிறார். ஆக அன்பழகனுக்கு சொந்த கட்சியிலும் சூழல் சுகமில்லை. 
ஹும், நாஞ்சில்! என்று பெயர் இருந்தாலே அரசியலில் சர்ச்சைதான் போல. 
-    விஷ்ணுப்ரியா