நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் தன்னுடைய முன்னோட்டத்தையும் வெளிப்படுத்தினார். தான் முதல்வராக விரும்பவில்லை என்றும் கட்சியும் ஆட்சியும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரஜினியின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.
 “ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை நாங்கள் வரவேற்கிறோம்.  அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம். அவர் தனிக்கட்சி என்று கூறும்போது இந்தத் தருணம் அதற்கு சரியாக இருக்காது. 1996-ல் ரஜினிகாந்த் செய்த மிகப் பெரிய தவறு என்னவென்றால், திமுகவை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்ததுதான். தான் ஆதரவு கொடுத்து, ஒருவரை முதல்வராக ஆக்க முடியும் என்பதை நிரூபித்துகாட்டியவர் ரஜினிகாந்த்” என பொன்.ராதாகிருஷ்ணான் தெரிவித்தார்.


மேலும் அவர் கூறுகையில், “சிஏஏ-வால் இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியரும் பாதிக்கப்பட மாட்டார். எனவே, காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை இஸ்லாமிய சகோதரர்கள் நம்ப வேண்டாம். மதரீதியான மோதல்களை உருவாக்க திமுக, காங்கிரஸ் திட்டமிடுகிறார்கள். தமிழகத்துக்கு துரோகம் செய்வதில் திமுக, காங்கிரஸ் கட்சிகளைத் தவிர வேறு கட்சிகள் எதுவும் கிடையாது. திறமைமிக்க பிரசாந்த் கிஷோர் தோல்வியையும் ருசித்துப் பார்க்க வேண்டிய காலம் வந்துள்ளது. பிரசாந்த் கிஷோர் ஏறிச் செல்லும் வாகனம் நான்கு டயர் இல்லாதது” என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.