நடிகர் விஜய் அரசியல் கருத்தை பேசக்கூடாது என யாரும் சொல்ல முடியாது என்று தமிழக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
சென்னையில் நடைபெற்ற ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக நடிகர் விஜய் பேசினார். அதிமுக அரசை விமர்சித்து அதில் பேசினார். உச்சகட்டமாக, “யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும்.” என்று விஜய் பேசியது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனையத்து விஜயை அதிமுக நிர்வாகிகள் விமர்சித்து பேசிவருகிறார்கள். படம் ஓட வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் அரசியல் பற்றி பேசுவதாக அமைச்சர்கள் பலரும் விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கருத்தைப் பேச கூடாது என யாராலும் சொல்ல முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் தேச ஒற்றுமை என்ற தலைப்பில் ‘ஒரே தேசம் ஒரே சட்டம்’ என்ற மக்கள் கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.


 “நடிகர் விஜய் இந்நாட்டின் குடிமகன். எனவே அவர் அரசியல் கருத்தை கூறக் கூடாது என யாரும் சொல்ல முடியாது. யாராக இருந்தாலும், உண்மையான அரசியல் கருத்துகளை சொன்னால் யாருக்கும் நிச்சயம் வருத்தம் ஏற்படாது. அது அனைவருக்கும் சந்தோசம்தான். ஆனால், அப்படி அல்லாமல் அரசியல் பேசினால், அதுவே அவருடைய மனசாட்சியைக் குத்தும். இது நடிகர் விஜய்க்கு மட்டும் அல்ல, எல்லாருக்கும் பொருந்தும்” என்றார்.