கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அவர் என்ன பேச போகிறாரோ என்று ஆளுங்கட்சியினர் அஞ்சினர். ஆனால் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சட்டமன்றத்திற்குள் சென்ற சிறிது நேரத்திலேயே வெளியேறிவிடுவார் என்பதால் ஆளுங்கட்சியினருக்கு நம்பிக்கை வந்துள்ளது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டலடித்துள்ளார். 

எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், ஆளுங்கட்சி செய்யும் தவறுகளையும் மக்களின் தேவைகளையும் மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிப்பதில்லை என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. பெரும்பாலான தருணங்களில் சட்டமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே பிரதான எதிர்க்கட்சியான திமுக, கூட்டணி கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்து விடுகிறது. எதிர்க்கட்சியின் இந்த செயல்பாட்டை மக்கள் பெரிதாக ரசிக்கவில்லை. 

வலுவான எதிர்க்கட்சியாக திகழும் திமுக, சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக வலுவான குரல்களை எழுப்பாமல் எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு செய்வது சரியான அணுகுமுறை அல்ல என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகவும் அமைந்துள்ளது. 

பட்ஜெட் தாக்கலின் போது கூட, அதை முழுமையாக கூட கவனிக்காமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் சுயேட்சை எம்.எல்.ஏவான தினகரனோ பட்ஜெட்டின் குறை நிறைகளை அலசி ஆராய்ந்து பேட்டி கொடுத்தார். 

இப்படியாக பல முக்கியமான தருணங்களிலும் பிரதான எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்பு செய்வது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  அரசு செய்யும் தவறுகளை எதிர்க்கட்சியான திமுக, சட்டமன்றத்தில் பேசுவதில்லை. எதிர்க்கட்சி தலைவராக கருணாநிதி 5 முறை இருந்துள்ளார். அப்போதெல்லாம், கருணாநிதி என்ன பேச போகிறார் என்று ஆளுங்கட்சியினர் பயப்படுவார்கள். ஆனால் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வந்ததும் போய்விடுவார் என்று ஆளுங்கட்சியினர் நம்புகின்றனர். ஆளுங்கட்சியை கேள்வி கேட்க வேண்டிய பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த நிலைக்கு தாழ்ந்துவிட்டதை நினைத்து கவலையாக இருக்கிறது என பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டலாக கூறினார்.