polling in r.k.nagar started by 8 o clock

சென்னை ஆர்.கே.நகரில் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தொகுதி முழுவதிலும் உள்ள 258 வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றமானவையாகக்ண்டறியப்பட்டுள்ளதால், 258 வாக்குச் சாவடிகளுக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை, ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு கடந்த ஏப்.12-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், வாக்காளர்களுக்கு பணம் வட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரையடுத்து அங்கு தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

நீண்டஇழுபறிக்குப் பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இடர்பாடுகள் ஏற்பட்டால், உடனடியாகப் பயன்படுத்துவதற்காக கூடுதல் இயந்திரங்கள் உள்பட மொத்தம் 1,300 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 360 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 360 ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்து வாக்குச் சாவடிகளின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

புதுதில்லியிலுள்ள இந்திய தேர்தல் ஆணையர், சென்னையிலுள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோர் நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இந்த கண்காணிப்புக் கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சென்னை, காமராஜர் சாலையிலுள்ள ராணி மேரி கல்லூரிக்கு எடுத்து செல்லப்படவுள்ளன. அதைத் தொடர்ந்து அவை ஏற்கெனவே பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறையில் பூட்டி சீல் வைக்கப்படும். வரும் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.