பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடி்பபடையில் தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் வரும் 25-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகத்தை உலுக்கியது. இது கொடூர சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவத்தில் பொள்ளாச்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், இதனால் காவல்துறை முழுமையான விசாரணை செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்து அரசாணையை வெளியிட்டது. 

இந்த விவகாரத்தை மு.க.ஸ்டாலின் மருமகன்  சபரீசன் சமூகவலைதளங்களில் பரப்பி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப் பார்க்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினர் குற்றம்சாட்டினர். மேலும் பொள்ளாச்சி ஜெயராமன், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையே பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இன்னும் தமிழகத்தில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களும் ஏற்பட்டு வருகின்றன. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் வீடு மற்றும் பண்ணை வீட்டில் ஆகிய இடங்களில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

 

இந்நிலையில் பிப்ரவரி 12-ம் தேதி அன்று வாழ்த்து தெரிவிப்பதற்காக மயூரா ஜெயக்குமாரை சந்தித்ததாக திருநாவுக்கரசு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவராகவும் உள்ள மயூரா ஜெயக்குமார் வரும் 25-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.