பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் இளம்பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரி, சதீஷ்குமார், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைதான 3 பேருக்கும் வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுகவில் இருந்து அருளானந்தம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கழகத்தின் கொள்ளை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்தின் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச்செயலாளர் அருளானந்தம் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.