‘சர்கார்’ படத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிராக மட்டுமல்ல, தி.மு.க.வுக்கும் எதிராகவும் நிறைய காட்சிகளும் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. அமைச்சர்கள் எதிர்க்கிறார்களே என்பதற்காக அவற்றையெல்லாம் நீக்கவேண்டிய அவசியம் இல்லை’ என்று படத்தின் முக்கிய வில்லனும் பழுத்த அரசியல்வாதியுமான பழ.கருப்பையா கூறியுள்ளார்.

‘சர்கார்’ படத்தில் அ.தி.மு.க. ஆட்சி மற்றும் முன்னாள் முதல்வரின் ஜெயலலிதாவின் பாத்திரச் சித்தரிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை வில்லன் போல் சித்தரிக்கப்பட்ட நிலையில், இந்த எதிர்ப்புகள் தேவையற்றவை என்ற கருத்துகளும் வெளிப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ‘15 வயசுலேயே நான் டவுசர் போட்டுக்கிட்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்துல கலந்துக்கிட்டவண்டா’ என்று தான் பேசிய வசனத்தை சென்சார் போர்ட் மியூட் செய்தது என்று கூறியதன் மூலம் தான் ஏற்ற வில்லன் பாத்திரம் கருணாநிதியை மனதில் கொண்டுதான் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்த பழ.கருப்பையா, அமைச்சர்களின் சலசலப்புக்கெல்லாம் படக்குழுவினர் அஞ்சவேண்டியதில்லை’ என்று முருகதாசுக்கும், நடிகர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கைவசம் உருப்படியான வளர்ச்சித்திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில், அதை விமர்சிக்கும் ‘சர்கார்’ படத்தை முடக்க நினைப்பது அப்படத்தின் மாபெரும் வெற்றிக்குத்தான் உதவும். தணிக்கைக்குழு படம் பார்த்து சான்றிதழ் கொடுத்த பிறகு அதை நீக்கு இதை நீக்கு என்று ஆளாளுக்கு கருத்து சொன்னால் மொத்தப் படத்தையும்தான் நீக்கவேண்டும்’’ என்கிறார் படத்தின்  வில்லன் பழ.கருப்பையா.