தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினியின் கருத்தை வழி மொழிவதைத் தவிர வேறு வழி அல்ல என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் சரியான ஆளுமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று ரஜினி குறிப்பிட்டது குறித்து கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதில் அளித்த கமல், “தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினியின் கருத்தை வழி மொழிவதைத் தவிர வேறு வழி அல்ல.” என்று கூறினார். வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்த கருத்து பற்றி கமலிடம் கேட்கப்பட்டது. இதற்கு “அது மு.க.அழகிரியின் கருத்து. நாட்டில் இதற்கான சுதந்திரம் உள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும் கமல் கூறுகையில், “பட வாய்ப்புகள் குறைந்ததால் அரசியலுக்கு வருவதாக முதல்வர் அவருடைய விருப்பங்களைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதைச் சொல்லி கொண்டேயிருப்பதால் அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஊராட்சிக்கும் மாநகராட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால், அதுவெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்பது அவர்களுடைய கருத்து. உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று கமல் தெரிவித்தார்.