Political promises that seal Twit second by second
சூழ்நிலை போல் மிகப் பெரிய சூனியக்காரன் யாருமில்லை! வடதிசையில் நின்று விடாப்பிடியாய் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவனை அவனே எதிர்பாராத வண்ணம் நேர் எதிராக தென் திசையில் தூக்கிச் சென்று நிறுத்தி குரல் கொடுக்க வைக்கும் திறன் சூழ்நிலைக்குத்தான் உண்டு!
அந்த வகையில் தான் கொண்ட கொள்கையிலும், கடைப் பிடிக்கும் பழக்கத்திலும் விடாப்பிடியாய் உள்ள மனிதர்களை அதற்கு எதிராக சூழல் பேச வைத்த உதாரணங்கள் சில இங்கே:
1. புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, ‘புகையிலை பழக்கத்திலிருந்து விடுபடுவோம்.’ எனும் நோக்கத்துடன், ஒரு மாதத்தில் புகையில பழக்கத்தை கைவிட்டோரை கவுரவிக்கும் வகையில் ‘பிரபலங்களுடன் கொண்டாடுவோம்.” எனும் நிகழ்ச்சி சென்னை கேன்சர் மருத்துவமனையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் பாலா...
“அரசே மது விற்பதும், புகையிலை விற்க அனுமதிப்பதும் இந்த நாட்டுக்கே அவமானம்.”_ என்று சொல்லியிருக்கிறார்.

பாலா சொல்ற வார்த்தையா இது? இன்னைக்கு இதை சொல்ற இதே வாய்தான், சில வருஷங்களுக்கு முன்னாடி ‘புகைச்சாதான் டயலாக் எழுதவே வரும்!’ அப்படின்னு வளையம் விட்டுகிட்டே பேட்டி கொடுத்துச்சு. இது நல்ல வாயின்னா அப்போ அது என்ன வாயி? பாலாண்ணே! திருந்துங்க பாஸ் தப்பில்ல் ஆனா அதுக்காக உடனே அரசாங்கம் மேலே நீங்க பாய்ஞ்சு பிறாண்டுறதுதான் ஹிஹிஹி...ன்னு இருக்குது.
2. தமிழக சட்டசபையில் தென்னையில் இருந்து இறக்கப்படும் ‘நீரா பானம்’ தொழிலுக்கான அனுமதி, ஊக்குவிப்பு பற்றிய விவாதம் வந்தபோது பல உறுப்பினர்களுக்கு அது என்ன பானம் என்று புரியவில்லை. உடனே அதன் பெருமைகளை எடுத்துரைத்தார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.
உடனே சபாநாயகர் தனபாலோ நீரா பானத்தின் பெருமைகளை சொல்லிவிட்டு ‘சபை உறுப்பினர்களுக்கு அது வழங்கப்பட்டால் சுவைத்தே அதன் பெருமையை தெரிந்து கொள்ளலாம்.’ என்றார். இதனால் அது அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் சபாநாயகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடல் நலன் பெற்று மீண்டும் சபைக்கு வந்தார் தனபால். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த விவாதத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி “ சட்டசபையில் நீரா பானம் குடித்த பிந்தான், சபாநாயகரின் உடல் நலம் பாதித்தது என சில பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளன. எனவே இந்த பானம் பற்றி பொதுமக்களிடம் அச்சம் உருவாகி உள்ளது.” என்றார் அதற்கு பதிலளித்த சபாநாயகர்...

“என் உடல்நலம் சரியில்லாமல் போனதற்கு நீரா பானம் காரணமில்லை. நான் அதை குடிக்கவே இல்லை.”-_ என்றார்.
ஆக தென்னை விவசாயிகளின் முன்னேற்ற திட்டங்களில் ஒரு முக்கிய திட்டமாக பார்க்கப்படும் நீரா பானத்துக்கு ஒப்புதல் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கும் முகமாக சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அந்த பானத்தை சபாநாயகர் குடிக்காமல் விட்டது மிகப்பெரிய தவறு என கடுப்பேறுகின்றனர் பொதுமக்கள்.
3. சிறிய குறைகளை கூட பூதாகரமாக்கி அறிக்கை விடுவது, பேட்டியளிப்பது, போராட்டம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஒரு சிலர் அன்றாட வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்...என்று எதிர்கட்சிகளை கடந்த சனிக்கிழமையன்று சட்டசபையில் வறுத்தெடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதே வாய்தான் அதே தினத்தில்...
“காவல்துறை மானியக்கோரிக்கையின் போது எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் வேலூர் மாவட்டத்தில் கிராம போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் சில கிராமங்களை பிரித்து வேலூர் வடக்கு போலீஸ் எல்லைக்குள் இணைக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
.jpeg)
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியபோது சென்னை மாநகருக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் முடங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். அது அப்படியில்லை, 117 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் துவங்கிய அந்த திட்டதின் பணி ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் அதை முறையாக செய்யாமல் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்று நடுவர் நீதிமன்றத்தில் இருக்கிறது. “
- _ என்று எதிர்க்கட்சியினரை கூலோ கூல் செய்யும் விதத்தில் பேசிப் புளங்காகிதமடைந்தார்.
ஸ்டாலின், துரைமுருகன் கோரிக்கைகள் போக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன் மற்றும் அதிருப்தி கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரி ஆகியோரின் கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக கூறி வேற வாய் காட்டினார்.
அவ்வ்வ்....சூழல் ஒரு மனுஷனை நேரத்துக்கு நேரம் எப்படியெல்லாம் ஆட்டிவைக்குதுடா சாமி!
