political murders in tamilnadu

கொடநாடு எஸ்டேட் காவலாளி தொடங்கி நாமக்கல் சுப்பிரமணியம் வரை தொடரும் அரசியல் மரணங்களின், மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாததால், சந்தேகங்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன.

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24 ம் தேதி, மூன்று கார்களில் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை அடித்து கொன்றுவிட்டு, அங்கிருந்த பணம் மற்றும் ஆவணங்களை கொள்ளை அடித்து சென்றனர்.

கொடநாடு பங்களாவில் என்னென்ன இருந்தது? என்பது யாருக்கும் தெரியாததால், கொள்ளை போன பொருட்கள் பற்றி தெளிவான தகவல் இல்லை.

அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட, ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சேலம் ஆத்தூர் அருகே, மர்மமான முறையில் விபத்தில் பலியானார்.

மற்றொரு குற்றவாளியான கேரளாவை சேர்ந்த சயான் என்பவர், திருச்சூர் அருகே கார் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, வருமான வரி சோதனைக்கு இலக்கான அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும், பொது பணித்துறை ஒப்பந்ததாரருமான நாமக்கல் சுப்பிரமணியம் என்பவர், நேற்று அவரது தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்த போது, நாமக்கல் சுப்பிரமணியம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அவர் வீட்டில் இருந்து பணமோ, ஆவணங்களோ பறிமுதல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனாலும், வருமான வரித்துறை விசாரணை சந்தித்த அவர், கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாமக்கல் சுப்பிரமணியம், அமைச்சர் செங்கோட்டையனின் உறவினராவார். சிறிய அளவில் ஒப்பந்த பணிகளை செய்ய தொடங்கி, படிப்படியாக உயர்ந்தவர்.

கடைசியாக, நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனை ஆகிய கட்டுமான ஒப்பந்த பணிகளை செய்து வந்துள்ளார். 

இந்த நிலையில்தான், சுப்பிரமணியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். சோதனை, விசாரணை என அலைக்கழிக்கப்பட்ட அவர், மன உளைச்சலில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தொடரும் அரசியல் தொடர்பான கொலை, விபத்து, தற்கொலை ஆகியவற்றின் பின்னணி குறித்த மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. இதனால், இதுகுறித்த சந்தேகங்கள் வலுக்க தொடங்கியுள்ளன.