கிங் மேக்கரின் மகன், பிரஷர் குக்கராகிப்போன அரசியல் அவலம்!


*    திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நாற்பது பேர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். மே 23-ல் நாடு முழுவதும் தாமரை மலரப்போகிறது: நரேந்திர மோடி. 
(தல, சர்வதேசமும் திரும்பிப் பார்த்த இந்திய பிரதமர்!-ன்னு உங்களை பி.ஜே.பி.க்காரங்க பீத்திக்கிறாங்க. ஆனா ஒரு  மாநிலத்தின், எதிர்கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்கள் எங்க கூட தொடர்புல இருக்கிறாங்கன்னு பேசி, உங்க மருவாதய நீங்களே கெடுத்துப்புட்டீகளே நமோ! இதுவா மாற்று அரசியல்!)

*    வேலூரில் அடிக்கும் அனல் தாங்காமல் ‘ஆட்சி மாற்றம் வரும்’ அப்படின்னு துரைமுருகன் அலறுகிறார். ஆனால் ஆட்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை, துரைமுருகனுக்குதான் ஏதோ பிரச்னை போல: வைகை செல்வன். 
(சரி சரி, சென்னையில போட்டெறியுற வெயில் தாங்காமதான் நீங்க புதுசா மூணு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் பண்ணிட்டு, பெரும்பான்மை எண்ணிக்கையை குறைக்க துடிக்கிறீங்க போல. ஒரு மந்திரி சபையில ரெண்டு வருஷங்கூட நீடிக்க தெம்பில்லாத உங்களுக்கு ஏன் இவ்வளவு விமர்சன வாயி மிஸ்டர் வைகை?)

*    தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் போல, அரிசிப் பஞ்சமும் ஏற்பட வாய்ப்புள்ளது: கே.எஸ். அழகிரி. 
(தல, உங்க கட்சியோட மத்த மாநிலங்களோட தலைவர்கள் ‘ராகுல் அடுத்த மாதம் பிரதமராக போகிறார். நல்லாட்சி மலரப்போகிறது, நாடு முழுவதும் செழிக்கப்போகிறது!’ன்னு ஆனந்தமா பாடிட்டு இருக்கிறாங்க. ஆனா நீங்க மட்டும் ஆப்படிக்கிறீங்களே, ராகுல்ஜி மேலே அப்படி என்ன பொறாம உங்களுக்கு?)

*    காங்கிரஸ் கட்சியினரின் மரபணுவிலேயே பொய் நிறைந்துள்ளது. அவர்கள் இதுவரையில் மக்களுக்கு அநீதிகளை மட்டுமே செய்துள்ளனர். அப்படி இருக்கையில் இனிமேல் மட்டும் எப்படி நியாயம் செய்வார்கள்?: யோகி ஆதித்யநாத்
(ஆமாமா, நம்ம கட்சியில எல்லாருமே அரிச்சந்திரனுக்கே அண்ணன்மார்கள். போன தேர்தலின் போது வெற்றி பயத்தில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை, தெரிந்தும் கூட பொய்யாக அள்ளி வீசினோம்! அப்படின்னு கட்கரி கனகச்சிதமா பேட்டி கொடுத்த பின்னும் இந்த சீனெல்லாம் தேவையா யோகியாரே?)

*    மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குக்கிராமங்கள் வரை மக்களை சென்றடைந்திருப்பதால், லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றியானது பிரகாசமாக உள்ளது: ஜி.கே.வாசன். 
(அண்ணே, நீங்க தன்னோட கூட்டணியாளுதான்னு எடப்பாடியார் மனசுல வெச்சிருக்கார், பயக்காதீங்க. மொத்தமா பத்து பேரோட நீங்க நிக்கிறதாலே மறந்துடுவார்ன்னு நினைச்சு இப்படியெல்லாம் அடிக்கடி பல்லாக்கு தூக்குறீங்க. கிங் மேக்கரோட  மகன் இப்படி பால் குக்கர் ரேஞ்சுக்கு பொங்குறதெல்லாம் அரசியல் அவலம்ணே!)