நடிகர் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா தமிழகம் முழுவதும் ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதன் பின்னணியில் அரசியலும் இருப்பது தெரியவந்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் என்று கூறிவிட்டு நடிகர் ரஜினி தர்மதுரை பட ஷூட்டிங்கிற்காக மும்பை சென்று விட்டார். அங்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் சந்திப்பு நடிகை நயன்தாராவுடன் கிரிக்கெட் விளையாட்டு என செம ஜாலியாக சுற்றி வருகிறார் ரஜினி. அதே நேரத்தில் அவரது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட் கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கிய கோயில்களாக ஏறி இறங்கி வருகிறார்.

 

வெளியிலிருந்து பார்க்கும்போது ரஜினியின் சகோதரர் ஆன்மீகச் சுற்றுப் பயணத்தில் இருப்பது போலவே தெரிகிறது. ஆனால் கோவிலுக்கு செல்வதற்கு முன்னும் பின்னும் அந்தந்த மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகள் ரஜினியின் சகோதரரை சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது மாவட்டம் முழுவதும் ரஜினிக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடு மகளிர் மன்ற நிர்வாகிகளின் செயல்பாடு போன்றவை குறித்து சத்யநாராயணா ஆர்வத்துடன் கேட்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பெல்லாம் ஆன்மீகச் சுற்றுப் பயணம் வரும்போது கோவில்களில் சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு நடையை கட்டுவதுதான் சத்தியநாராயணன் பழக்கம் என்கிறார்கள் அவரை நன்கு தெரிந்தவர்கள்.

 

ஆனால் தற்போதைய பயணத்தின் போது மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சத்யநாராயணா ஆர்வத்துடன் தெரிந்துகொள்வது ரஜினிக்கு தகவல் அளிக்க தான் என்று சொல்கிறார்கள். வழக்கமாக காஞ்சிபுரம் அருகே உள்ள கோவில்களுக்கு செல்வதும் மட்டுமே சத்யநாராயணன் பழக்கம். ஆனால் இந்த முறை கொங்கு மண்டலத்தில் உள்ள கோவில்களை அவர் தேர்வு செய்திருப்பது தமிழக அரசியலில் கொங்கு மண்டலம் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்துள்ளது. 

எனவே அங்கு தனக்கு உள்ள செல்வாக்கை அறிந்து கொள்ளவே ரஜினி தனது சகோதரரை அனுப்பி வைத்துள்ளதாக கூறுகிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் சத்யநாராயணா செய்தியாளர்களிடமும் ஆர்வத்துடன் பேசி வருகிறார்.